இயக்குனர் மணிரத்னம் இயக்கி நடிகர் கார்த்தி, புதுமுக நடிகை அதிதிராவ் ஆகியோர் நடித்துள்ள ‘காற்று வெளியிடை’ என்ற சினிமாபடம் வருகிற 7-ந் தேதி வெளியாகிறது. இதில் நடித்துள்ள கதாநாயகன் கார்த்தி, கதாநாயகி அதிதிராவ் ஆகியோர் கோவை புரூக் பீல்டில் உள்ள வணிக வளாகத்தில் ரசிகர்கள் முன்பு தோன்றினார்கள்.
அப்போது ரசிகர்கள் அவர்களை நோக்கி கையசைத்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். சுற்றி நின்ற ரசிகர்கள் அனைவரும் செல்போனில் படம் எடுத்தனர். சில ரசிகர், ரசிகைகள் மட்டும் நடிகர் கார்த்தியுடன் ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர்.
ரசிகர்கள் எழுதி கொடுத்த கேள்விகளை ஒருங்கிணைப்பாளர்கள் தொகுத்து நடிகர் கார்த்தியிடம் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதில்கள் கூறியதாவது:-
கோவையில், ரசிகர்களின் கேள்விகளுக்கு நடிகர் கார்த்தி பதில் அளித்து பேசியபோது எடுத்த படம். அருகில் கதாநாயகி அதிதிராவ் உள்ளார்.
நான் நடித்து வெளிவர உள்ள ‘காற்று வெளியிடை’ படம் ரோஜா, பம்பாய் படத்தை போன்று சர்ச்சைக்குரிய படம் அல்ல. இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்டு இருந்தாலும் இது ஒரு காதல் கதை. இந்த படத்தில் நான் விமானியாக நடித்துள்ளேன். இந்த படத்துக்கு ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
இந்த படத்தின் இயக்குனர் மணிரத்னத்திடம் நான் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளேன். அப்போது நான் அதிகம் திட்டு வாங்கினேன். ஆனால் இப்போது நடிகர் என்பதால் அவர் என்னை திட்டுவது இல்லை. எனவே உதவி இயக்குனர் என்பதை விட நடிகராகவே இருக்க விரும்புகிறேன். நல்ல இயக்குனரிடம் இருந்து அழைப்பு வந்தால் அந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றுவதை விட கதாநாயகனாக நடித்தால் படம் முழுவதும் வந்து ரசிகர்களை திருப்தி படுத்த முடியும்.
நான் உதவி இயக்குனராக இருந்தபோது எனது அண்ணனை மனதில் வைத்து ஒரு கதை எழுதினேன். 16 வயது முதல் 60 வயது வரை உள்ள ஒருவரின் வாழ்க்கை பற்றிய அந்த கதையில் அவரால் மட்டுமே நடிக்க முடியும். தற்போது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். ஆனால் நிச்சயம் வருங்காலத்தில் ஒரு படமாவது இயக்குவேன். நானும் எனது அண்ணனும் ஒரே துறையில் உள்ளோம். இந்த கால கட்டத்தில் அவருடன் சேர்ந்து நடிக்க ஆவலாக உள்ளேன். நல்ல கதை அமைந்தால் அண்ணன் சூர்யாவுக்கு வில்லனாக கூட நடிப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.