ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் தோற்றதற்கு பழிக்குப்பழி வாங்கும் விதத்தில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை வீழ்த்தி பி.வி. சிந்து இந்தியன் ஓபனை வென்று சாதித்துள்ளார்.
இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டிகள் இன்று இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 5-ம் நிலை வீராங்கனையான பி.வி. சிந்து மூன்றாம் நிலை வீராங்கனையான கரோலியான மரினை எதிர்கொண்டார்.
ரியோ ஒலிம்பிக்கில் பி.வி. சிந்துவை தங்க பதக்கம் வாங்க முடியாமல் தடுத்தவர் கரோலினா. அதற்கு பழிவாங்கும் விதமாக இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சிந்து களம் இறங்கினார்.
ஆட்டம் தொடங்கியதில் இருந்தே பி.வி. சிந்து 7-5, 10-8 என முன்னிலைப் பெற்றார். ஒரு கட்டத்தில் ஆட்டம் 15-15 என சமநிலை அடைந்தது. பின்னர் 19-18 என கரோலினா முன்னிலைப் பெற்றார்.
அதன்பிறகு தொடர்ந்து மூன்று புள்ளிகளைப் பெற்று சிந்து 21-19 என முதல் செட்டை கைப்பற்றினார்.
2-வது செட்டில் 5-2 என முன்னிலைப் பெற்றிருந்த சிந்து, அதன்பின் 9-7 என முன்னிலைப் பெற்றார். பின்னர் சிறப்பாக விளையாடியதன் மூலமாக 21-16 என 2-வது செட்டையும் கைப்பற்றி வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் தோல்விக்கு பழிக்குப்பழி தீர்த்துக் கொண்டார் வெள்ளி மங்கை சிந்து.