அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் 6 அரை சதங்கள் அடித்ததன் மூலம் 11 இடங்கள் முன்னேறி 11 ஆவது இடத்தை லோகேஷ் ராகுல் பிடித்துள்ளார்.
இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா 2-1 எனத் தொடரைக் கைப்பற்றியது.
இந்த தொடரில் இந்திய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ராகுல் 6 அரை சதங்கள் அடித்திருந்தார்.
குறிப்பாக இறுதி போட்டியில் 2 இன்னிங்சிலும் அரைசதங்களை கடந்து இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளமாக இருந்தார்.
குறித்த தொடரில் அவர் 7 இன்னிங்சில் 64, 10, 90, 51, 67, 61 மற்றும் 51 (ஆட்டம் இழக்காமல்) ஓட்டங்கள் சேர்த்தார்.
இதன் காரணமாக கடந்த தினங்களில் 22 ஆவது இடத்தில் இருந்த ராகுல் நேற்று வெளியிட்ட துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் 11 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
மேலும் ரஹானே மூன்று இடங்கள் முன்னேறி 14 ஆவது இடத்திலும், முரளி விஜய் நான்கு இடங்கள் இறங்கி 34 ஆவது இடத்திலும், புஜாரா 4 ஆவது இடத்திலும், விராட் கோலி 5 ஆவது இடத்திலும் உள்ளனர்.
மேலும் இதில் யாரும் அசைக்க முடியாத நிலையில் 941 புள்ளிகளுடன் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தினை தக்கவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.