தென்னாபிரிக்காவின் நிறவெறி எதிர்ப்பாளரான அஹமது கத்ராதா தனது 87 ஆவது வயதில் மரணத்துள்ளார்.
மூளையில் செய்து கொண்ட சத்திரசிகிச்சைக்கு பின்னர் சிறிது காலம் சுகவீனமூற்றிருந்த கத்ராதா ஜொஹன்னஸ்பேர்க் மருத்துவமனையில் மரணமடைந்ததாக அவரது அறக்கட்டளை நேற்று அறிவித்தது.
1964 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட ஆபிரிக்க தேசிய கொங்கிரஸின் எட்டு செயற்பாட்டாளர்களில் நெல்சன் மண்டேலாவுடன் கத்ராதாவும் ஒருவராக இருந்தார். நிறவெறி அரசை பதவி கவிழ்க்க முயன்றதாகவே இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
கத்ராதா 26 ஆண்டுகள் சிறை அனுபவித்ததோடு அதில் 18 வருடங்கள் மோசமான ரொப்பன் தீவில் சிறை வைக்கப்பட்டார். 1989 ஆம் ஆண்டு விடுதலையான அவர், ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவினால் தனது அரசில் இணைய அழைப்புவிடுக்கப்பட்டார்.
1999ஆம் ஆண்டு பாராளுமன்றத்திற்கு விடைகொடுத்த அஹமது கத்ராதா தொடர்ந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். அண்மையில் அவர் ஜனாதிபதி ஜகொப் சுமாவை பதவி விலக ஆபிரிக்க தேசிய கொங்கிரஸுக்கு அழுத்தம் கொடுத்தார்.