ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவித்துக் கொள்ளுதல் தொடர்பில் பேசுவதற்காகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாகவும், எனினும் இச் சந்திப்பில் எவ்விதமான முடிவுகளும் எட்டப்படாத நிலையில் சந்திப்பு நிறைவு பெற்றுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பின் போது கேப்பாபுலவு மற்றும் வலிவடக்கு உள்ளிட்ட பகுதிகளில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்க வேண்டும்” என எதிர்க்கட்சி தலைவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
அத்துடன், காணி விடுவிப்பு தொடர்பிலான நியாயப்பாடுகளையும் இரா.சம்பந்தன் ஜனாதிபதியிடம் எடுத்து கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேப்பாபுலவு காணி விடுவிப்பு தொடர்பில் இராணுவ தளபதியுடன் ஜனாதிபதி உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் எனவும், ஆனால் அது எப்போது என்பதிலேயே பிரச்சினை இருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஏழு மாகாணங்களை சேர்ந்த முதலமைச்சர்களுடன் நேற்று முன்தினம் ஜனாதிபதி சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதியை அவசரமாக சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.