ஒவ்வொரு பருவ நிலையும் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு சவால் விடுக்கும். நோயெதிர்ப்பு சக்தி சரியான அளவில் இருப்பவர்களுக்கு எந்த பருவ மாற்றமும் தாக்காது.எனினும் எம்மில் பலரும் ஒவ்வொரு பருவ நிலை மாற்றத்தின் போது உடல் நலம் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அதிலும் கோடைக் காலம் வந்துவிட்டால் கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதயத்துடிப்பின்மைக்கான தொடர் சிகிச்சைப் பெறுபவர்கள் ஆகியோர் மிகுந்த எச்சரிக்கையுணர்வுடன் இருக்கவேண்டும்.
ஏனெனில் கோடைக் காலத்தில் வெப்ப நிலை அதிகரிப்பதால், சமநிலையான வெப்பத்தை பராமரிப்பதற்காக, உடலானது வியர்வையை வெளியேற்றும். இதனால் உடலுக்கு நீர்வறட்சி ஏற்படக்கூடும். நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால் பாரிய ஆபத்து கூட நிகழக்கூடும். அதனால் மருத்துவர்களின் இந்த அறிவுரையை மறுக்காமல் பின்பற்றவேண்டும். குறிப்பாக முதியவர்கள் இதனை கட்டாயமாக கடைபிடிக்கவேண்டும்.
தண்ணீர் மற்றும் பிரெஷ்ஷான பழச்சாறை சீரான இடைவெளியில் அருந்தி, தாகத்தைத் தணிக்கவேண்டும். அவசர அவசியம் ஏற்பட்டாலும் வெயிலில் நீண்ட நேரம் உலாவுவதை தவிர்க்கவேண்டும். மென்மையான வண்ணமும், அதிக எடையில்லாத ஆடையையும் அணிந்தால், வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ள எளிதாக இருக்கும். கோடைக் காலத்தில் மட்டும் வீரியமான உடற்பயிற்சியை தவிர்க்கவேண்டும். அதே போல் மதுவையும், கோப்பியையும் முற்றாக தவிர்ப்பது நல்லது. இவையிரண்டும் உடலுக்கு தண்ணீர் பற்றாக்குறையை ஏற்படுத்தி, சிறுநீர் கடுப்பையும், அசௌகரியத்தையும் உருவாக்கிவிடும். ஒவ்வாமைக்காக மருந்தை எடுத்துக் கொள்ளும் முதிய வயதினர், அந்த மருந்து மாத்திரைகளை வெயில் படாத இடத்தில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவேண்டும்.
அக்குள் பகுதி உலர்ந்து காணப்படுவதும், 8 மணி நேரம் வரை சிறுநீர் பிரியாமல் இருப்பதும் உடல் கடுமையான நீர்வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான அறிகுறியாக எடுத்துக் கொண்டு, உடனே மருத்துவர்களை சந்தித்து தேவையான ஆலோசனை பெற்றுக்கொள்ளவேண்டும். இதய நோயாளிகள் சிறிய அளவிலான பாதிப்புகள் வந்தாலும் உடனடியாக மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெறவேண்டும். அலட்சியப்படுத்தினால் இதய செயலிழப்பு, மூளைக் காய்ச்சல் போன்றவை வரக்கூடும். அதனால் இந்த கோடைக் காலத்தை மிகுந்த கவனத்துடன் எதிர்கொள்ளவேண்டும். போதிய அளவிற்கு ஆரோக்கியமான தண்ணீர் மற்றும் திரவ உணவு வகைகளை தினமும் எடுத்துக் கொள்ள தவறாதீர்கள்.