விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட புலி உறுப்பினர்களை மீட்கும் திட்டங்களை அமெரிக்கா கொண்டிருந்ததா என்பது குறித்து தன்னால் உறுதியாக கூறமுடியாது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகவியலாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களை கொழும்பில் நேற்று சந்தித்து உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட புலி உறுப்பினர்களை பாதுகாப்பாக மீட்கும் திட்டம் ஒன்றை அமெரிக்கா கொண்டிருந்தது.
எனினும், இலங்கை அரசாங்கம் அந்த திட்டத்திற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை என முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இது குறித்து நேற்றைய தினம் கோத்தபாய ராஜபக்சவிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இறுதி யுத்தத்தின் போது பொது மக்களை பாதுகாப்பாக மீட்கும் அமெரிக்கா விருப்பம் தெரிவிப்பதாக அப்போதைய அமெரிக்க தூதுவர் ரொபர்ட் ஓ பிளேக் தன்னிடம் கூறியிருந்தார்.
எனினும், அந்த திட்டம் பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களை மீட்பதற்கான திட்டம் இல்லை என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அது ஒரு பரிந்துரையாக மட்டுமே இருந்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.