கனடிய பாராளமன்ற மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் கொன்சவேடிவ் கட்சி வேட்பாளர் ராகவன் பரஞ்சோதிக்கும், லிபரல் கட்சியின் மேரி இங்க் இற்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்றே கூறப்படுகின்றது .தேர்தல் நாள் ஏப்ரல் 03 திகதி திங்கட்கிழமையாகும்.
பல்லின மக்களும் ராகவனுக்கு ஆதரவை தெரிவித்து தேர்தல் பணிகளை செய்துவருகிறார்கள். குறிப்பாக சீன சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் ராகவனின் தேர்தல் பணிகளில் இணைந்து செயலாற்றி வருகிறார்கள். தமிழ்ச் சமூகத்தின் ஆதரவு ராகவன் பரஞ்சோதிக்கு பலமாக இருப்பதையும் காணக்கூடியதாக இருக்கிறது. தமிழர் தேசிய அவை, கனடியத் தமிழர் பேரவை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட கனடாவின் பல்வேறு தமிழர் அமைப்புக்களும் இந்தத் தேர்தலில் ஒற்றுமையுடன் ராகவன் பரஞ்சோதிக்காக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த இடைத்தேர்தலில் ராகவன் பரஞ்சோதியை வெற்றியடைய வைப்பதன்மூலம், அந்தச் செய்தி தமிழரின் ஒற்றுமையை கனடாவின் அனைத்துக் கட்சிகளுக்கும் உரத்துக்கூறுவதாக அமையும். ஆளும் கட்சியான லிபரல் கட்சியினை எதிர்கட்சியான கொன்சவேடிவ் கட்சி தோற்கடித்தமை கனடா முழுவதையும் மார்க்கம் தோர்ண்ஹில் தொகுதியை திரும்பிப் பார்க்க வைக்கும் என்றும் அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.
ராகவன் பரஞ்சோதி வெற்றி பெற கொன்சவேடிவ் கட்சியின் அரசியல் தலைவர்கள் தமது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். தேசிய அளவில் கனடாவின் எதிர்க்கட்சித் தலைவரும், கனடா கொன்சவேடிவ் கட்சி இடைக்காலத் தலைவருமான ரோணா அம்ப்ரோஸ், கொன்சவேடிவ் கட்சித் தலைமைக்கு போட்டியிடும் தீபக் ஒபராய், மார்க்கம் யூனியன்வில் பாராளுமன்ற உறுப்பினர் பொப் சரோயா ஆகியோர் ராகவனின் தேர்தல் அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து தமது ஆதரவை உறுதிப்படுத்திச் சென்றனர். மாநில அளவில் ஒன்ராறியோ எதிர்க்கட்சித் தலைவரும், புறோக்கிரஸிவ் கொன்சவேடிவ் கட்சித் தலைவருமான பற்றிக் பிரவுண் நேரில் வருகை தருவதற்கு முன்னர் தன் ஆதரவுச் செய்தியை அனுப்பியுள்ளார். “எனது நீண்டகால நண்பன் ராகவன் பரஞ்சோதிக்கு ஆதரவு தருவது எனக்குப் பெருமை தருகிறது. மார்க்கம் சமூகத்திலேயே வாழ்ந்துவரும் ராகவன் மார்க்கம்-தோர்ண்ஹில் தொகுதி மக்களின் அடுத்த பாராளுமன்றப் பிரதிநிதியாகி தொகுதிவாழ் மக்களுக்காக கடுமையாக உழைப்பார்.” என்று பற்றிக் பிரவுண் தெரிவித்துள்ளார். ஒன்ராறியோ பி.சி.கட்சி மாநில வேட்பாளரான லோகன் கணபதி தன் ஆதரவாளர்களுடன் ராகவன் பரஞ்சோதியின் அலுவலகத்திற்கு வந்து தேர்தல் பணிகளில் உதவிக்கொண்டிருக்கிறார்.
”தமிழ் மக்களின் அரசியல் பலம் ஒட்டாவாவில் அதிகரிக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இதைத் தவறவிட்டுவிடக் கூடாது. வெற்றி வாய்ப்பு ராகவனுக்கு இருக்கிறது என்பதற்காக தமிழ் மக்கள் அலட்சியமாக இருந்துவிடக்கூடாது. ஒவ்வொரு வாக்கும் அவசியம். தமிழ் வாக்காளர்கள் அனைவரும் தவறாது திரண்டு சென்று ராகவனுக்கு வாக்களிக்க வேண்டும். இடைத்தேர்தல் நாள் வரை காத்திருக்காமல் இந்த முற்கூட்டிய வாக்கெடுப்பிலேயே கலந்து கொண்டு தவறாமல் வாக்களித்துவிடவேண்டும். இத் தொகுதிக்கு வெளியே வாழும் தமிழர்கள் உங்களுக்குத் தெரிந்தவர்கள் இத் தொகுதியில் வாக்காளராக இருப்பின் அவர்களை ராகவனுக்கு வாக்களிக்குமாறு கோருங்கள்.அதன்மூலம் ஒட்டாவா பாராளுமன்றத்தில் தகுதிவாய்ந்த இன்னுமொரு தமிழர் நிச்சயமாக இடம் பெறுவார்” எனவும் ராகவன் பரஞ்சோதியின் தேர்தல் அலுவலகத்தில் இருந்து தமிழ் மக்களை நோக்கி வேண்டுகோள் விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்