கால அவகாசத்தைக் கடந்து செல்வது எப்படி?
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக மீண்டும் ஒரு தீர்மானம் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
அமெரிக்கா தலைமையிலான நாடுகள், 2012ம் ஆண்டு தொடக்கம் 2014ம் ஆண்டு வரை முன்வைத்த தீர்மானங்களின் நீட்சியாக- 2015ம் ஆண்டு இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானத்தின் தொடர்ச்சியாகவே இப்போதைய தீர்மானம் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
2015ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியே இந்த தீர்மானம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு, இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கை அரசுக்கு இந்தளவுக்கு நீண்ட காலஅவகாசத்தை அளிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை, தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தையே அளித்திருக்கிறது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அணுகுமுறையில் இருந்து பார்த்தால், கால அவகாசம் அளிக்க வேண்டியது தவிர்க்க முடியாததே.
இலங்கை அரசின் இணக்கப்பாட்டுடன் தான், ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் எதையும் செய்ய முடியும்.
எனவே இலங்கை அரசாங்கம் எதையாவது செய்ய வேண்டுமானால், அதற்கு கால அவகாசம் கொடுப்பதை விட வேறு வழியில்லை.
ஆனாலும், இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் என்பது மிகையானது என்பதும், இந்தக் கால அவகாசத்துக்குள் இலங்கை அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்தும் கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதுமே தமிழர் தரப்பின் பிரதான எதிர்பார்ப்பு.
ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்கும் ஐ.நா பொறிமுறை ஒன்றை இலங்கையில் உருவாக்க வேண்டும் என்ற கருத்தை, ஐ.நா மனித உரிமை ஆணையாளரும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அத்தகைய பொறிமுறை எதை யும் உருவாக்கும் ஏற்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமலேயே, புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இதனால், இந்தக் காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ள முடியாத நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது,
இந்த தீர்மானத்தின் மூலம், இலங்கைக்கு இரண்டு ஆண்டுகள் காலஅவகாசம் வழங்கப்பட்டு விட்டது.
பாதிக்கப்பட்ட தரப்பாக உள்ள தமிழர்கள், அரசுகளின் சபை ஒன்றில், அதிகாரத்துடன் செயற்பட முடியாது என்பதால், இதனை வெறுமனே கைகட்டிக் கொண்டு நின்று பார்க்கத் தான் முடிந்திருக்கிறது.
இந்தநிலையில் நீதிக்கான தேடலில் ஈடுபட்டுள்ள தமிழ் மக்கள் விரும்பியோ விரும்பாமலோ, இந்த இரண்டு ஆண்டு காலஅவகாசத்தைக் கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஜெனீவா பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கான கால அவகாசமாக இது அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுமா- இல்லையா என்ற கேள்வி தமிழ் மக்களிடம் இருக்கிறது.
ஏனென்றால், இதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் ஆகட்டும், மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் ஆகட்டும், மனித உரிமைகள், மற்றும் பொறுப்புக்கூறல் விவகாரங்களில் கொடுத்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
இதனால் தமிழ் மக்களுக்கு இந்தக் காலஅவகாசம் குறித்து நம்பிக்கை கொள்ளக்கூடிய சூழல் இல்லை.
காலத்தை இழுத்தடிக்கும் வகையிலேயே அரசாங்கம் இந்தக் கால அவகாசத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் என்ற சந்தேகங்களின் மத்தியில் தான் தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.
இவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியாத- சந்தேகத்துடன் பார்க்க வேண்டிய நிலைமை ஏற்படடுள்ளமைக்கு அரசாங்கம் தான் காரணம்.
உதாரணத்துக்கு, நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாலோசனைச் செயலணியின் உறுப்பினர்கள் இணைந்து அண்மையில் வெளியிட்ட ஓர் அறிக்கை யைக் குறிப்பிடலாம்.
இந்தச் செயலணி நாடெங்கும் அமர்வுகளை நடத்தி ஆலோசனைகளை நேரிலும் எழுத்திலும் பெற்று, ஓர் அறிக்கையை அரசாங்கத்திடம் கையளித்தது.
அதனை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வரவேற்றதுடன், அதன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறும் அரசாங்கத்திடம் கோரியிருந்தார்.
ஆனால் இலங்கை அரசாங்கமோ அந்த அறிக்கையை இதுவரையில் கவனத்தில் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை.
இது, கலந்தாலோசனை செயலணியின் உறுப்பினர்களையும் ஏமாற்றமடைய வைத்துள்ளது.
இதனால் தான், அண்மையில் வெளியிட்ட கூட்டு அறிக்கை ஒன்றில், இதற்கு முந்திய ஆணைக்குழுக்களின் அறிக்கைகளைப் போலவே, கலந்தாலோசனைச் செயலணியின் அறிக்கையும் கிடப்பில் போடப்படலாம் என்ற அச்சத்தை அவர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஒரு செயலணியின் உறுப்பினர்களுக்கே இப்படியொரு சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றால் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைக்க முடியாத நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றால், பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழ் மக்களுக்கு அத்தகைய சந்தேகமோ அவநம்பிக்கையோ வருவது ஒன்றும் ஆச்சரியமில்லையே.
இலங்கை அரசுக்குக் கால அவகாசம் கிடைத்து விட்டது. அதனை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப் போகிறது என்ற கேள்விக்கான உறுதியான பதிலை இப்போது கூற முடியாது.
அந்தப் பதில் கிடைப்பதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும்.ஆனால், இந்தக் கால அவகாசத்தை இலங்கை அரசாங்கம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுமா- இல்லையா என்று பாதிக்கப்பட்ட தரப்பாகிய தமிழர்கள் காத்திருக்க முடியாது.
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கான நீதியை வழங்குவதற்கான முயற்சிகளை எடுத்தாலும் சரி எடுக்காது போனாலும் சரி, இந்தக் காலஅவகாசத்தைக் கடந்து செல்வதற்கும் அதற்கு அப்பாலுள்ள காலத்தை எதிர்கொள்வதற்கும் தயார்படுத்தல்களைச் செய்வது முக்கியமாகிறது.
இலங்கை அரசுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது- வாக்குறுதிகள் உண்மையாக நிறைவேற்றப்படுகின்றவா அல் லது ஏமாற்றும் முயற்சிகள் தான் தொடர்கின்றவா என்பதை உன்னிப்பாக கண்காணிப்பதும் அதனை வெளியுலகத்துக்குப் வெளிப்படுத்துவதும் அவசியமான செயற்பாடாக இருக்கும்.
இந்த விடயத்தை வடக்கு, கிழக்கை உள்ளடக்கியதாக மட்டுமன்றி, முழு இலங்கைக்குமான ஒரு பொறிமுறையை அமைத்து கண்காணிப்பதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டால் அது பொறுப்புக்கூறல் நகர்வுகளுக்கான முக்கிய திருப்பமாக அமையலாம்.
ஜெனிவா தீர்மானம் என்பது தனியே தமிழர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கானது மட்டுமல்ல. பாதிக்கப்பட்ட தரப்பாக தமிழர்கள் மாத்திரம் இருக்கவில்லை.
சிங்களவர்களும், முஸ்லிம்களும் இருக்கின்றனர்.காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை, கொலைகள், ஆட்கடத்தல்கள் என்று மனித உரிமை மீறல்கள் பற்றிய பிரச்சினைகளை அனைவரும் சந்தித்திருக்கிறார்கள்.
ஆகவே ஜெனிவா தீர்மானத்தின் முழுமையான நடைமுறைப்படுத்தல் என்பது, அனைவருக்கும் அவசியமானது.
அனைவருக்குமான மனித உரிமைகளையும், சமத்துவம், நீதியையும் தான் ஜெனிவா தீர்மானம் வலியுறுத்துகிறது.
அதைவிட, இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு எல்லா இனங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வும் அவசியம்.
ஆனால், துரதிஷ்டவசமாக ஜெனிவா தீர்மானத்தின் பொறுப்புக்கூறல் கடப்பாட்டை நிறைவேற்றுவது தமிழர்களுக்கு மாத்திரம் சாதகமானது என்றும், சிங்களவர்களுக்கு விரோதமானது என்றும் ஒரு மாயை உருவாக்கப்பட்டிருக்கிறது.இந்த மாயையைக் கடந்து செல்ல வேண்டிய தேவையும் இருக்கிறது.
தமிழர்களுக்கான நியாயத்தை உறுதிப்படுத்துவதற்கு தனியே தமிழர் தரப்பின் குரல்கள் மாத்திரம் போதாது, நீதியை வழங்கும் மனோநிலை சிங்கள மக்களுக்கும் ஏற்பட வேண்டும்.
அத்தகைய நிலையை ஏற்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகவும், இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஜெனிவா தீர்மானத்தின் பரிந்துரைகள் எந்தளவுக்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதை இனத்துவச் சாயலுக்கு அப்பால், கண்காணிக்கின்ற, அதுபற்றிய பக்கச் சார்பற்ற அறிக்கைகளை சர்வதேச சமூகத்துக்கு சமர்ப்பிக்கின்ற ஒரு பொறிமுறையை உருவாக்குவதில் தமிழர் தரப்பு வெற்றி கண்டால், அடுத்து வரும் காலத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த இரண்டு ஆண்டுகள் ஏமாற்றமே அளித்தால் கூட, அடுத்த கட்டத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டு செல்வதற்கான ஒரு தளத்தை, சர்வதேச அரங்கில் திறப்பதற்கான சூழலை அது ஏற்படுத்தக் கூடும்.
எடுத்த எடுப்பிலேயே இந்த விவகாரத்தை ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு கொண்டு போய் விட முடியாது.
ஏனென்றால் பாதுகாப்புச் சபைக்கு இந்த விவகாரத்தை ஏதாவது ஒரு நாடு தான் கொண்டு செல்ல முடியும்.
எந்தவொரு நாடும் அவ்வாறு செய்வதற்கு தயாராக இருப்பதாகத் தெரியவில்லை.
ஆனால் அளிக்கப்பட்ட காலஅவகாசத்தை ஏமாற்றுவதற்காகவே பயன்படுத்தியிருக்கிறது அரசாங்கம் என்பது, ஒரு பக்கசார்பற்ற – இனத்துவ அல்லது அரசியல் சார்பற்ற பொறிமுறையின் மூலம் நம்பகமான முறையில் உறுதி செய்யப்பட்டால், சர்வதேச சமூகத்தினால் அதனை அவ்வளவு இலகுவாக உதாசீனப்படுத்த முடியாது.
பாதிக்கப்பட்ட தமிழர் தரப்புக்கு நீதியே முதன்மையானது. அதனை அடைவதற்கு வெறுமனே அறிக்கைப் போர் மூலம் அடைந்து விட முடியாது.
இலங்கை அரசாங்கம், பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் விடயத்தில், பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விடயத்தில் எந்தளவுக்கு உழைத்திருக்கிறது அல்லது ஏமாற்று வேலையை செய்திருக்கிறது என்பதை ஆதாரபூர்வமாக ஆவணப்படுத்த வேண்டும்.
அது தான், நீதி தேடும் தமிழர்கள் தமது இறுதி இலக்கை எட்டுவதற்கு தெளிவான ஒரு வழியைக் காட்டும்.
இல்லை, இரண்டு ஆண்டு கால அவகாசம் முடியும் வரையில், பொறுத்திருந்து விட்டு பொங்கலாம் என்றிருந்தால், மீண்டும் கையைப் பிசைந்து கொண்டு நிற்க வேண்டிய நிலை தான் ஏற்படும்.