படை அதிகாரிகளைத் துரத்தும் போர்க்குற்றங்கள்
அண்மைய வாரங்களாகவே இலங்கை இராணுவத்தின் மூத்த அதிகாரிகளின் பெயர்கள் ஊடகங்களில் அதிகம் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன.
போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேயின் வீசா விண்ணப்பத்தை அவுஸ்திரேலியா நிராகரிப்பதாக ஒரு செய்தி.
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை மற்றும் ஊடவியலாளர்கள் கடத்தல், காணாமல் ஆக்கப்படுதல் உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் முன்னாள் இராணுவ புலனாய்வுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது செய்யப்படவுள்ளதாகவும் மற்றொரு செய்தி.
இராணுவத்தின் 50வது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதாக மற்றொரு செய்தி.
இவ்வாறான மூத்த இராணுவ அதிகாரிகள் பற்றிய செய்திகள் இப்போது ஊடகங்களில் அதிகம் இடம்பிடித்து வருகின்றன.
இராணுவத் தலைமை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக அண்மையில் ஓய்வுபெற்றதையடுத்து இரண்டாவது நிலைப் பதவியான இராணுவத் தலைமை அதிகாரியாக யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அடுத்த இராணுவத் தளபதியாக நியமிக்கப்படக் கூடியவர் என்று எதிர்பார்க்கப்படுபவர் இவர்.
2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் மகிந்த அரசின் அச்சுறுத்தலால் நாட்டை விட்டு வெளியேறியவர். மைத்திரிபால சிறிசேன 2015 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற 48 மணித்தியாலங்களுக்குள்ளாகவே நாடு திரும்பி இராணுவத்தில் இணைந்தவர் தான் மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க.
அரசாங்கத்தின் செயற்திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பை வழங்கக் கூடியவர் என்பதாலும் மூப்பு வரிசையில் முன்னிலையில் இருப்பதாலும் இவருக்கு அடுத்த இராணுவத் தளபதியாகும் வாய்ப்புக் கிடைத்தால் அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.
ஆனால் இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்காற்றிய மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேக்கு அவுஸ்திரேலியா வீசா வழங்க மறுத்திருப்பதாக கூறப்படும் விடயம் ஆச்சரியத்தையே அளித்திருக்கிறது.
இலங்கையின் மனித உரிமை மீறல் விவகாரங்களில் அவுஸ்திரேலியா மென்போக்காக நடந்து கொள்கிறது. என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் திஸார சமரசிங்கவினால் அவுஸ்திரேலியாவில் இலங்கைத் தூதுவராக பணியாற்ற முடிந்தது.
அவர் மீது போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அவரை வெளியேற்ற வேண்டுமென்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதும் அவுஸ்திரேலியா அதை திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. படகு அகதிகள் விவகாரத்தை வைத்து இலங்கை அரசு பேரம் பேசியதால் அப்போதைய அவுஸ்திரேலிய அரசாங்கம் கொழும்பின் தாளத்துக்கே ஆடியது.
ஆனால் இப்போது அந்த நிலை மாறி வருகிறது. என்பதற்கு உதாரணமாக சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இலங்கை தொடர்பான ஜெனிவா தீர்மானத்திற்கு முன்னர் இணை அனுசரணை வழங்குவதை தவிர்த்து வந்த அவுஸ்திரேலியா இம்முறை அதற்கு முன்வைந்திருக்கிறது.
இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கும் தீர்மான வரைபு முன்வைக்கப்பட்ட போது தெளிவான கால வரம்புடன் தான் அதனை வழங்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை அவுஸ்திரேலியா முன்வைத்தது.
ஐரோப்பிய ஒன்றியம், சுவிற்சலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் தான் இதனை வலியுறுத்தியிருந்தன.
இப்போது மெஜர் ஜெனரல் சாஜி கல்லகேயின் வீசா விண்ணப்ப விடயத்தில் கடுமையான போக்கை அவுஸ்திரேலியா கடைப்பிடிப்பதானது போர்க்குற்றச்சாட்டுகள் விடயத்தில் அதன் இறுக்கமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறது.
மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே அவுஸ்திரேலியாவில் உள்ள தனது சகோதரரைப் பார்ப்பதற்காக அங்கு செல்வதற்கு கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய தூதரகத்தில் வீசா கோரியிருந்தார்.
இதற்காக கடந்த செப்டம்பர் மாதம் அவர் விண்ணப்பித்திருந்தார். 2016 டிசம்பர் தொடக்கம் 2017 ஜனவரி வரை அவர் அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கு விருப்பம் வெளியிட்டிருந்தார்.
ஆனால் அவருக்கு இன்னமும் அவுஸ்திரேலியா வீசா வழங்கவில்லை. இறுதிப்போரின் போது 2009 மே 7ம் திகதி தொடக்கம் 2009 ஜூலை 20ம் திகதி வரை இராணுவத்தின் 59வது டிவிஷனுக்கு தலைமை தாங்கினார் என்பதற்காக அவரது வீசா விண்ணப்பம் அவுஸ்திரேலியாவினால் நிராகரிக்கப்பட்டதாக செய்திகள் வெளியான போதிலும் இன்னமும் வீசா தொடர்பான ஆய்வுகள் நடப்பதாக அவுஸ்திரேலிய தூதரகம் கூறியிருக்கிறது.
எனினும் வீசாவுக்கு விண்ணப்பித்து 6 மாதங்களாகி விட்டது. அவர் கேட்டிருந்த காலமும் முடிந்து விட்டது. குறிப்பிட்ட காலத்திற்குள் வீசா வழங்கப்படாதது அல்லது சரியான பதிலொன்று அளிக்கப்படாதது இந்த விடயத்தில் அவுஸ்திரேலியாவின் இறுக்கமான போக்கையே வெளிப்படுத்துகிறது.
மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே மேற்படி காலகட்டத்தில் மாத்திரம் போரில் பங்கெடுத்தவர் அல்லர்.
2007 ம் ஆண்டு நடுப்பகுதியில் மன்னாரில் இறுதிக்கட்டப் போர் தொடங்கப்பட்ட போது அதிரடிப்படை ஒன்று என்ற பெயரில் அப்போது இயங்கிய 58வது டிவிஷனின் கட்டளை அதிகாரியாக இருந்தவர் பிரிகேடியர் சாஜி கல்லகே தான்.
சிலாவத்துறை பகுதியைக் கைப்பற்றும் நடவடிக்கையை இவரே மேற்கொண்டிருந்தார். ஆனால் மன்னாரிலிருந்து உயிலங்குளம், திருக்கேதீஸ்வரம், பாப்பா மோட்டை பகுதிகளில் ஆரம்பக்கட்டச் சண்டைகள் நடந்து கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதால் பிரிகேடியர் சாஜி கல்லகே கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவருக்குப் பதிலாக அந்தப் படைப்பிரிவின் தளபதியாக நியமிக்கப்பட்டவர் தான் பிரிகேடியர் சவேந்திர சில்வா. போர் முடியும் வரை அவரே 58வது டிவிஷனின் தளபதியாக இருந்தார்.
இருதய சத்திர சிகிச்சைக்குப் பின்னர் களமுனைக்கு திரும்பிய பிரிகேடியர் சாஜி கல்லகேக்கு மீண்டும் 58வது டிவிஷனின் கட்டளைத் தளபதி பதவி கிடைக்கவில்லை. 2008ல் இருந்’து அவர் 58வது டிவிஷனின் பிரதிக் கட்டளை அதிகாரியாக கொமாண்டோ படைப்பிரிவுகளின் கட்டளை அதிகாரியாக போர்முனையில் செயற்பட்டார்.
அதற்குப் பின்னர் 2009 மே 7ம் திகதி தொடக்கம் 2009 ஜூலை 20ம் திகதி வரையில் 59வது டிவிஷனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றினார். இந்தக் காரணத்தை முன்னிறுத்தியே இவருக்கு அவுஸ்திரேலியா வீசா வழங்க மறுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதற்காக அவுஸ்திரேலியா தாரப்பில் வலுவான வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வௌியாகியிருக்கின்றன.
ஐநா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் அறிக்கை, முன்னாள் ஐநா பொதுச் செயலர் பான் கீ மூன் நியமித்த ஐநா நிபுணர் குழுவின் அறிக்கை ஆகியவற்றில் இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றஙகள் இடம்பெற்றுள்ளன என்ற ஆதாரங்களை அவுஸ்திரேலியா கவனத்தில் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
அதுமாத்திரமன்றி 58வது டிவிஷனின் கட்டளை அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா முன்னர் ஒருமுறை கூறியிருந்த கருத்தும் கூட இப்போது மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேக்கு வினையாக மாறியிருக்கிறது.
இறுதிக்கட்டப் போரில் ஆளில்லா வேவு விமானங்களின் மூலம் நிகழ்நேர படங்கள் எடுக்கப்பட்டே ஆட்டிலறி தாக்குதலுக்கான இலக்குகள் தெரிவு செய்யப்பட்டன என்று மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியிருந்தார்.
இறுதிக்கட்டப் போரில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட போர் தவிர்ப்பு வலயங்கள் ஆட்டிலறி தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தன. அதில் பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.
எனவே ஆளில்லா வேவு விமானங்களின் தரவுகள் மூலம் பாதுகாப்பு வலயங்கள் என்று தெரிந்து கொண்டுதான் பொதுமக்களின் இலக்குகள் மீது படையினர் தாக்குதல் நடத்தியிருக்க வேண்டும் என்று அவுஸ்திரேலியா வாதத்தை முன்வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம் மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்களை திட்டமிட்டு நடைமுறைப்படுத்தி ஆதரவளித்தார் என்றும், தனது கட்டுப்பாட்டில் இருந்த படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க தவறினார் என்றும் அவுஸ்திரேலியாவின் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கிறார். இதனால் தான் அவருக்கு வீசா மறுக்கப்பட்டிருக்கிறது. அல்லது எந்தப் பதிலும் வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்று கருதப்படுகின்றது.
மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேயின் வீசா விண்ணப்பம் நிராகரிக்கப்படவில்லை என்றும், அது தொடர்பான செயல்முறைகள் இன்னமும் இடம்பெறுவதாகவும் கூறியுள்ள அவுஸ்திரேலிய தூதரகம் இது தொடர்பாக மேலதிக கருத்துக்கள் எதையும் வெளியிடுவதற்கு மறுத்துள்ளது.
மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே போர்க்குற்றச்சாட்டினால் நெருக்கடிக்குள்ளாகியது இதுவே முதல் சந்தர்ப்பம் என்று கூற முடியாது. ஏற்கனவே 2010ம் ஆண்டு இவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பிரித்தானியா சென்றிருந்த போதும் இவருக்கு எதிராக மனித உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
இதனால் பிரித்தானிய நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்படக் கூடிய நிலையும் ஏற்பட்டது. இதையடுத்து மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே அவசரமாக நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
இப்போது அவருக்கு அவுஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கான அனுமதியே கிடைக்கவில்லை. இதுபோன்ற நிலையை இலங்கை இராணுவத்தின் ஏனைய அதிகாரிகள் பலருங்கூட எதிர்காலத்தில் சந்திக்கலாம்.
ஏற்கனவே அமெரிக்காவின் பசுபிக்கட்டளைப் பீடத்தின் கருத்தமரங்கில் பங்கேற்பதற்கு மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவுக்கு அமெரிக்கா வீசா வழங்க மறுத்திருந்தது.
இப்போதைய நிலையில் மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே சார்பில் இலங்கை அரசாங்கம் கூட குரல் கொடுக்காது. ஏனென்றால் கடந்த 2016ம் ஆண்டு தொடக்கத்தில் நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாலோசனை செயலணி நியமிக்கப்பட்ட போது அதில் இராணுவ அதிகாரிகள் இருவரும் இடம்பெற வேண்டும் என்று பலாலியில் நடந்த படை அதிகாரிகளுக்கான ஒரு கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சடரவீரவுடன் அவர் வாக்குவாதம் செய்திருந்தார்.
இதையடுத்தே மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே யாழ்ப்பாணத்தில் 51வது டிவிஷன் தளபதி பதவியிலிருந்து தூக்கப்பட்டு காலாட்படைகளின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டார்.
நல்லிணக்க முயற்சிகளுக்கு எதிரானவர் என்ற கருத்து அரசாங்கத்திட்ம் இருப்பதால் மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேக்கு அரசாங்கத்தின் அனுதாபமும் கூட கிடைக்க வாய்ப்பில்லை.
அதேவேளை ஐநா மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பித்த அறிக்கையில் உறுப்பு நாடுகளுக்கு அவர் முன்வைத்திருந்த பரிந்துரையில் சித்திரவதை, காணாமல் ஆக்குதல், போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கெதிரான குற்றங்கள் போன்ற மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் என்று குற்றம் சாட்டப்படுபவர்கள் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் உலகளாவிய அதிகார வரம்புக்குட்பட்ட வகையில் விசாரிக்கப்பட்டு தண்டனைக்குட்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பரிந்துரை வெளியாக முன்னரே மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேயின் வீசா விண்ணப்பம் முடக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் பரிந்துரைக்குப் பின்னர் நிலைமை எப்படி மாறும் என்று கூற முடியவில்லை.
அதேவேளை போர்க்குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தயங்குகிறது. என்பதையும் ஐநா மனித உரிமை ஆணையாபளர் செய்ட் அல் ஹூசைன் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
மோசமான குற்றங்கள் தொர்பாக விசாரணை நடத்தி தண்டனை வழங்குவதில் இலங்கை தோல்வி அடைந்துள்ளதானது ஒரு பரந்துபட்ட தயக்கத்தை பிரதிபலிப்பதாக அல்லது பாதுகாப்பு படைகள் மீது நடவடிக்கை எடுக்க அஞ்சுவதாகத் தோன்றுகிறது. என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
போருடன் தொடர்புடைய மீறல்களில் மாத்திரமன்றி தென்னிலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களில் தொடர்புடைய படைத்தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குக் கூட அரசாங்கம் தயங்குகிறது.
இதற்குப் படையினர் தமக்கு எதிராகத் திரும்பி விடுவார்களோ, சிங்கள மக்களு தமக்கு எதிராகத் திரும்பி விடுவார்களோ என்ற அச்சமும் காரணமாக இருக்கலாம். இதனால் தான் விசாரணைப் பொறிமுறையில் சர்வதேசப் பங்களிப்பு அவசியம் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
அதேவேளை போர்க்குற்றச்சாட்டுகள் உண்மையா பொய்யா என்று உறுதி செய்யப்படும் வரையில், போருடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகள் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலை இனிமேல் அதிகரிக்கும் என்பதையே அவுஸ்திரேலியாவின் இப்போதைய நிலைப்பாடு எடுத்துக்காட்டியிருக்கிறது.