கோத்தபாய செய்த குண்டுத்தாக்குதல்கள் அம்பலம் : சிக்குவாரா கோத்தா??
கடந்த காலத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தற்போது சூடு பிடித்துள்ளது. எனினும் உண்மைகள் மூடி மறைக்கப்படுகின்றதா என்ற சந்தேகமும் தோன்றியுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
லசந்த கொலையில் பல்வேறு திருப்பு முனைகள் ஏற்படுத்தப்பட்டன. அதற்கடுத்து களமிறங்கிய பொன்சேகா, கோத்தபாய ராஜபக்சவே அந்தக் கொலையைச் செய்தார் என தெரிவித்தார்.
மீண்டும் கோத்தபாய குண்டுத்தாக்குதல்களையும் தனது அதிகார குழுக்கள் மூலம் நிறைவேற்றினார் எனவும் பொன்சேகா பகிரங்கப்படுத்தியுள்ளார். அவற்றின் மூலம் பல சந்தேகங்கள் ஏற்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
என்றபோதும் ஒரு கேள்வி, இது வரையில் அமைதியாக இருந்த பொன்சேகா, அப்போதைய ஆட்சிக்கு முக்கிய புள்ளி. அதனால் நடந்த சம்பவங்களுக்கு அவரும் பொறுப்பு கூறுதல் அவசியம்.
அதன் காரணமாக அவர் தற்போது தம்மீது உள்ள களங்கத்தை போக்க இன்னும் ஒருவர் மீது பழிசுமத்துகின்றா? இதன் படி பார்க்கும் போது அவருக்கும் கொலைகளில் தொடர்பு உண்டு எனும் சந்தேகம் அனைவரிடமும் இருக்கக் கூடும்.
அப்படியானால் இப்போது அரசு பக்கத்தில் இருக்கும் அவர், தம் மீது உள்ள குற்றங்களை பொய் என நிரூபித்து, உண்மையான குற்றவாளியை மக்கள் முன் கொண்டு வர முடியுமே? அதனை ஏன் செய்யவில்லை?
கோத்தபாயவும் கூட சரத் பொன்சேகாவிற்கு கொலைகளில் பங்கு உண்டு எனத் தெரிவித்திருந்தார். என்றாலும் அந்தச் சந்தேகத்தை பொன்சேகா ஏன் தீர்க்கவில்லை? அரசுடன் இணைந்து குற்றவாளிகள் ஏன் இன்னும் வெளிப்படுத்தப்பட வில்லை?
இவ்வாறான பல சந்தேகங்களை தென்னிலங்கை புத்திஜுவிகள் வெளிப்படுத்துகின்றனர். அவற்றிற்கு அண்மையில் பொன்சேகா ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய செவ்வியின் மூலம் பதில் கூறுகின்றார். அவருடைய பதில்,
நான் அமைச்சரவையில் இருந்தாலும் கூட அந்தப் பணிகளைச் செய்வதற்கு வேறு அமைச்சர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் மூலமாக குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்.
எனக்கு அதில் தலையிட முடியாது. தற்போது வேகமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன அதனால் தீர்ப்பு கொடுக்கப்படும்.
மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் கோத்தபாய தமக்கு கீழ் உள்ள குழுக்களை கொண்டே இவற்றை செய்தார்.
உதாரணமாக வெளியமுன எனப்படும் மனித உரிமைகள் வழக்கறிஞரை தாக்குமாறு என்னிடம் கோத்தபாய கேட்டார்.
ஆனால் நான் முடியாது என்று கூறினேன் ஆனால் 3 நாட்களில் வெளியமுன வீட்டின் மீது குண்டுத்தாக்குதல் நடைபெற்றது.
அதே போன்று டிரான் அளஸ் வீட்டிற்கும் குண்டுத்தாக்குதல் நடத்தியது கோத்தபாயவே என சரத் பொன்சேகா பகிரங்கமாக தெரிவித்தார். அதன் படி இவற்றினை அடிப்படையாகக் கொண்டு கோத்தபாய சிக்கலில் சிக்குவாரா?
அது மட்டுமல்லாது நிதியமைச்சர் ரவிகருணாநாயக்கவும் கூட பாராளுமன்றத்தில் “லசந்தவை கொலை செய்தது யார் என எனக்குத் தெரியும்” எனக் கூறியிருந்தார்.
இப்படியாக பலரும் பலவிதமாக கூறிக்கொண்டு வருகின்ற போதும் கூட குற்றவாளிகளை தண்டிக்கும் செயற்பாடுகள் மட்டும் இழுபறியாகவே இருக்கின்றது.
அப்படி பார்க்கும் போது அரசியல்வாதிகளின் நாடகச் செயற்பாடுகளா இப்போது நடைபெற்றுக் கொண்டு வருகின்றது என தென்னிலங்கை அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
நல்லாட்சி அரசு என்பது ஆட்சிக்கு வந்தது ஊழலை முற்றாக அழிப்பது, கடந்த காலத்தில் இடம் பெற்ற அனைத்து குற்றங்களுக்கும் தீர்வுகளை முன்வைப்பது, கொலை வெள்ளைவான் கலாச்சாரத்தை முற்றாக அழிப்பது.
போன்ற வாக்குறிகளையும் அள்ளி வழங்கியவாறே ஆட்சிக்கு வந்தது. என்றபோதும் தற்போது வரையிலும் கண்ணாம்பூச்சி ஆட்டமே ஆடிவருவதாக அரசியல் விமர்சகர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
எது எவ்வாறாயினும் இப்போது நடைபெறும் விடயங்களைப் பார்க்கும் போது அனைவரும் கூட்டாகச் சேர்ந்து மக்களை ஏமாற்றிக் கொண்டு வருகின்றார்களா எனவும் கூறப்படுகின்றது.
சம்பவங்கள் பதிவுகளாக ஆவணங்களாக மட்டுமே இருக்கின்றதே தவிர தீர்ப்புகளும், முடிவுகளும் மட்டும் மறைமுகமாகவே காணப்பட்டு வருகின்றது.