சசிகலா பரோல் கோரிக்கை! நிராகரித்த சிறை அதிகாரிகள்!
தேர்தல் ஆணைய விசாரணையை காரணம் காட்டி சசிகலா விண்ணப்பித்த பரோல் கோரிக்கையை பெங்களூரு சிறை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்பதை காரணம் காட்டி பரோல் கேட்ட சசிகலாவின் கோரிக்கையை சிறைத்துறை அதிகாரிகள் நிராகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இரட்டை இலை தொடர்பான விசாரணைக்கு ஓபிஎஸ் மற்றும் சசிகலா தரப்பு இன்று தேர்தல் ஆணையத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
இதற்காக சசிகலா பரோலில் டெல்லி செல்ல இருப்பதாக நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளம் முதன் முதலில் செய்தி வெளியிட்டது.
டெல்லியில் இன்று தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. சசிகலா மற்றும் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் வாதங்களை முன்வைத்தனர்.
இதனிடையே சசிகலா தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை இணைத்து பெங்களூரு சிறைத் துறை அதிகாரிகளிடம் பரோல் கேட்டிருந்திருக்கிறார். ஆனால் சிறைத் துறை அதிகாரிகளோ இதுபோன்ற காரணங்களுக்கு பரோல் தர முடியாது என நிராகரித்து விட்டாராம்.
இதனைத் தொடர்ந்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் பரோல் கேட்டு மனுத்தாக்கல் செய்யலாமா என சசிகலா தரப்பு ஆலோசனை நடத்தியிருந்திருக்கிறது. அப்போதுதான் தினகரன் தரப்பில் இருந்து நமது ஸ்லீப்பர் செல்கள் சாதகமான முடிவு நிச்சயம் வரும் என்ற நம்பிக்கையை தெரிவித்துள்ளனர்.
ஆகையால் பரோல் கேட்டு நீதிமன்றம் போக வேண்டாம் என கூறியுள்ளது. இதனையும் ஏற்றுக் கொண்ட சசிகலா, நீதிமன்றம் மூலம் பரோல் கேட்கும் முயற்சியை கைவிட்டு விட்டாராம்.
இதன்பின்னர் ஹரீஷ் சால்வேவை ஓபிஎஸ் அணிக்காக ஆஜராக வைக்கக் கூடாது என்ற திட்டத்தை நிறைவேற்றும் வியூகத்தையும் சசிகலாவே பெங்களூரு சிறையில் இருந்து கூறியிருக்கிறார்.
இதனடிப்படையில்தான் ஹரீஷ் சால்வே கடைசி நேரத்தில் ஓபிஎஸ் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் என்கின்றன போயஸ் வட்டாரங்கள்.