போர்க்குற்றவாளி என குற்றச்சாட்டு! இராணுவ அதிகாரிக்கு வீசா வழங்க மறுத்த அவுஸ்ரேலியா
போர்க்குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும், இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேக்கு நுழைவிசைவு வழங்க அவுஸ்ரேலியா மறுத்துள்ளது.
அவுஸ்ரேலிய குடியுரிமை பெற்றுள்ள தனது சகோதரரைப் பார்ப்பதற்காகவே, மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே ஒரு மாத கால அஸ்ரேலிய நுழைவிசைவுக்கு விண்ணப்பித்திருந்தார்.
எனினும், இறுதிப் போரின் போது, 2009 மே 7ம் நாள் தொடக்கம், 2009 ஜூலை 20ம் நாள் வரை 59 வது டிவிசனுக்குத் தலைமை தாங்கினார் என்பதாலேயே மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேயின் நுழைவிசைவு விண்ணப்பம் அவுஸ்ரேலியாவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
தனது தலைமையில் இலங்கை படையினர் நிச்சயமாக போர்க்குற்றங்களையும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களையும் இழைத்துள்ளனர் என்று அவுஸ்ரேலிய தூதுரகம் தெரிவித்ததாக மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கை இராணுவத்தின் காலாட்படைகளின் பணிப்பாளராக பணியாற்றும் மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே, இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்கு வகித்த இலங்கை இராணுவத் தளபதிகளில் ஒருவராவார்.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டியே அவுஸ்ரேலிய குடிவரவு மற்றும் எல்லை பாதுகாப்பு திணைக்களம் மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேயின் நுழைவிசைவு கோரிக்கையை நிராகரித்துள்ளது.
அத்துடன், இலங்கையில் 40 ஆயிரம் பொதுமக்கள் வரையில் இறுதிக்கட்டப் போரில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்த, 2011 மார்ச் 31ம் நாள் வெளியிடப்பட்ட ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையையும் அவுஸ்ரேலியா மேற்கோள்காட்டியிருக்கிறது.
இறுதிக்கட்டப் போரில் இலங்கை படையினர், ஆளில்லா வேவு விமானங்களின் மூலம் திரட்டிய நிகழ்நேரப் படங்கள் மூலம், களமுனைத் தளபதிகள் இலக்குகளைத் தீர்மானித்தனர் என்று மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா கூறியிருந்த கருத்தை மேற்கொள்காட்டிய அவுஸ்ரேலியா, மூன்றாவது போர்தவிர்ப்பு வலயம் மீது ஆட்டிலறி தாக்குதலை நடத்துகிறோம் என்று மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே அறிந்திருந்தார் என்றும் குற்றம்சாட்டியுள்ளது.
மேஜர் ஜெனரல் கல்லகே, போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை திட்டமிட்டு, நடைமுறைப்படுத்தி, ஆதரவளித்தார் என்று அவுஸ்ரேலியா குற்றம்சாட்டியிருக்கிறது.
தமது கட்டுப்பாட்டில் இருந்த படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்கத் தவறி விட்டார் என்றும் அவுஸ்ரேலியா குற்றம்சாட்டியுள்ளது.
மேஜர் ஜெனரல் சாஜி கல்லகேக்கு எதிராக அவுஸ்ரேலியா போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதானது, தமிழ் பொதுமக்கள் மீது இலங்கை படையினரால் திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பதை அவுஸ்ரேலியா நம்புகிறது என்பதை வெளிப்படுத்துவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.