இலங்கை அரசாங்கம் மீண்டும் சர்வதேச நீதிபதிகளை ஏற்றுக்கொண்டது?
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிபதிகள் உள்வாங்கப்பட வேண்டும் என்பதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை கூறினார், தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
ஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐ.நா சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இரண்டாவது அறிக்கையில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க சர்வதேச நீதிபதிகள் உள்வாங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்தை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.
அதாவது, போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள் உள்வாங்கப்படவேண்டும் என்பதை இலங்கை அரசாங்கம் மீண்டும் ஏற்றுக்கொள்வதாக இம்முறை முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சர்வதேச நீதிபதிகளுக்கு நாட்டில் இடமில்லை, யுத்தத்தை வெற்றி கொண்ட எமது இராணுவ வீரர்கள் சர்வதேசத்தின் முன்னிலையில் நிறுத்தப்பட மாட்டார்கள் என நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் கூறிவருகின்ற நிலையில் இவ்வாறான ஒரு கருத்தை ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.