ஓபீஎஸ் அணிக்கு தாவும் 6 அதிமுக. எம்.எல்.ஏ-க்கள்?!- பாஜகவின் அடுத்த அதிரடி
சசிகலா அணியிலிருந்து ஒ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆறு எம்எல்ஏ-க்கள் மாற சம்மதம் தெரிவித்து விட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இவர்களை அணி மாற்றும் வேலையில், பி.ஜே.பி தலைமைக்கு நெருக்கமான காவி வேட்டி அணிந்த மனிதர் ஈடுபட்டு வருகிறார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் அதிகார மோதல் வலுவடைந்துள்ளது. இதன் விளைவு சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரண்டு அணிகள் உருவாகின.
இருப்பினும், சசிகலா அணியில் இருந்த எடப்பாடி பழனிசாமி, முதல்வராகி ஆட்சியை அமைத்து விட்டார். அவரது தலைமையிலான அமைச்சரவை, நிதிநிலை பட்ஜெட்டையும் தாக்கல் செய்து விட்டது.
மழை நின்ற பிறகும் தூரல் ஓயாதது போல எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், கட்சித் தலைமைக்கு மிரட்டல் விடுவது வாடிக்கையாகி விட்டது.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர், பகிரங்கமாகவே முதல்வருக்கு மிரட்டல் விடுத்தார்.
இன்னும் சில எம்எல்ஏ-க்கள் ரகசியமாக அமைச்சர்களிடமும் கட்சித் தலைமையிடமும் மிரட்டி காரியத்தைச் சாதித்து வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைவதற்கு முன்பு, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆட்சியமைக்க பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன.
ஆனால், அந்த வாய்ப்புகளை அந்த அணி சரியாகப் பயன்படுத்தவில்லை. இதனால், மத்திய அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் அணி மீது வருத்தம்.
இருப்பினும், தங்களை நம்பி, அ.தி.மு.க-விலிருந்து துணிச்சலாகப் பிரிந்து வந்த பன்னீர்செல்வத்தை கைவிட, பாஜக நிர்வாகிகளுக்கு விருப்பம் இல்லை.
இதனால், பாஜகவின் மேலிடத்துக்கு நெருக்கமான காவிவேட்டி அணிந்த நபர் தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
அவர், எம்எல்ஏ-க்களை அணிமாற்றும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், “சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ள காவி வேட்டி அணிந்த நபர், சசிகலா அணியில் விருப்பம் இல்லாமல் இருப்பவர்களைக் கணக்கெடுத்து அவர்களிடம் தூது அனுப்பினார்.
அந்த வலையில் முதற்கட்டமாக ஆறு எம்எல்ஏ-க்கள் விழுந்துள்ளனர்.
அவர்களை சென்னைக்கு அழைத்து வந்த ஓ.பன்னீர்செல்வம் அணியினர், நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்துள்ளனர்.
சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்று விட்டு, எம்எல்ஏ விடுதிகளில் அந்த எம்எல்ஏ-க்கள் தங்காமல், ஓட்டலுக்கு வந்து விடுகின்றனர்.
அவர்களுக்கு, அந்த நட்சத்திர ஓட்டலில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
அந்த ஓட்டலில் காவி வேட்டி அணிந்த நபர், எம்எல்ஏ-க்களைத் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி முடித்து விட்டார்.
விரைவில் அந்த ஆறு எம்எல்ஏ-க்களும் சசிகலா அணியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மாற உள்ளனர்” என்றனர்.
ஓ.பன்னீர்செல்வம் அணி தரப்பில் பேசியவர்கள், “சசிகலா அணியில் உள்ளவர்களில் பெரும்பாலான எம்எல்ஏ-க்கள் விருப்பம் இல்லாமல் உள்ளனர்.
அவர்கள், ‘இரட்டைஇலை’ சின்னத்துக்காக அந்த அணியில் உள்ளனர். இரட்டை இலை சின்னம் அணி மாறினால் நிச்சயம் சசிகலாவின் கூடாரம் காலியாகி விடும்.
வரும் மார்ச் 23-ம் தேதிக்குள் முடிவு தெரிந்துவிடும். ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தை நம்பி போட்டியிடும் டி.டி.வி.தினகரனுக்கு, இந்தத் தேர்தல் மூலம் நல்ல பாடம் கற்பிக்கப்படும்.
பாஜக உதவியுடன் எம்எல்ஏ-க்கள் அணி மாறுவது என்பது எல்லாம் பொய். அவர்களே விருப்பப்பட்டு அணி மாறுகின்றனர்”என்றனர்.
பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தையுடன் நம்மிடம் பேசிய அணி மாறும் மனநிலையிலிருக்கும் தென்மாவட்டத்தைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர், “கூவத்தூர் ரிசார்ட்டில் எங்களை அவர்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததால், எங்களால் எதையும் செய்ய முடியவில்லை.
மேலும் அ.தி.மு.க. ஆட்சிக்காக நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாக்களித்தோம். மற்ற கட்சிகளைப் போல குடும்ப அரசியல் அ.தி.மு.க-விலும் தலைதூக்கத் தொடங்கி உள்ளது.
சசிகலா, டி.டி.வி.தினகரன் என அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதை நாங்கள் விரும்பவில்லை.
எங்களைப் போல மனவேதனையுடன் அ.தி.மு.க-வுக்காக டி.டி.வி. தினகரனின் நடவடிக்கைகளை பொறுத்துக்கொண்டு இருக்கும் எம்எல்ஏ-க்கள் அதிகம் பேர் அங்கு உள்ளனர். அவர்களும் விரைவில் நல்ல முடிவை எடுப்பார்கள்”என்றார்.
நம்மிடம் பேசிய எம்எல்ஏ-விடம் காவி வேட்டி அணிந்த நபரின் பேச்சுவார்த்தை குறித்து கேட்டதற்கு, ‘ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்துதான் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
நீங்கள் குறிப்பிடுவதைப் போல காவிவேட்டி அணிந்த நபர் யாரும் எங்களிடம் பேசவில்லை’ என்றார்.
அணி மாற்ற நடத்தப்பட்ட பேரம்குறித்து உள்விவரம் தெரிந்த வட்டாரங்கள் கூறுகையில், ”ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு மாற விரும்பிய எம்எல்ஏ-க்களுக்கு 5 சி வரை பேரம் பேசப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ஒரு சி கொடுக்கப்பட்டுள்ளது. அணி மாறியதும் அவர்களுக்கு மீதமுள்ள தொகை கொடுக்கப்படும். சசிகலா தரப்பில் எம்எல்ஏ-க்களுக்கு கொடுக்கப்பட்ட உறுதியை அந்தத் தரப்பு காப்பாற்றவில்லை.
இந்த அதிருப்தியிலும் சில எம்எல்ஏ-க்கள் உள்ளனர். அவர்களுக்கும் பா.ஜ.க. தரப்பிலிருந்து தூது விடப்பட்டுள்ளது என்றனர்