முல்லை மாவட்டத்தை காப்பாற்றுங்கள்! ரொறன்ரோ மேயரிடம் மக்கள் கோரிக்கை
சிங்கள குடியேற்றங்கள், இராணுவ மயமாக்கல் மற்றும் சிங்கள மீனவர்களின் அத்துமீறல்களினால் முல்லைத்தீவு மாவட்டம் அழிக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் மாவட்டத்தையும் மக்களையும் காப்பாற்றுங்கள் என முல்லைத்தீவு மாவட்ட மக்கள் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றன.
இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் கனடா நாட்டின் ரொறன்ரோ மாநகர மேயர் ஜோன் ரொறி ஆகியோர் முல்லைத்தீவு- முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் மாவட்டத்தில் உள்ள பொது அமைப்புக்களினை சந்தித்தனர்.
இதன்போதே மக்கள் மேற்படி கோரிக்கையினை விடுத்திருக்கின்றனர்.
இதன்போது மேலும் குறிப்பிடப்படுகையில்,
மாவட்டத்தில் அதியுச்ச நிலையில் இராணுவ மய மாக்கல் நடைபெற்று கொண்டிருக்கின்றது. அதேவேளை மகாவலி எல் வலயம் என்ற பெயரில் சிங்கள மக்கள் நன்கு திட்டமிட்டு குடியேற்றப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், அவர்களுக்கான பிரதேச செயலர் பிரிவு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.
இதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சொந்தமான சுமார் 73 கிலோ மீற்றர் கடற்பகுதியில் 1400 தமிழ் மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபட்டுவந்தனர்.
இதற்கிடையில் சுமார் 800 வரையான சிங்கள மீனவர்கள் உட்புகுத்தப்பட்டு இலங்கையில் தடைசெய்யப் பட்ட அத்தகை கடற்றொழில் முறைகளையும் கையாண்டு தொழில் செய்கின்றனர்.
இதனால் மிக விரைவாக கடலில் தமிழ் மீனவர்கள் கால் வைக்க இயலாத நிலை உருவாகியுள்ளது.
அதேபோல் முல்லைத்தீவு மாவட்டம் அதிக வறுமையினால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக மாறியுள்ளது. இதற்குக் காரணம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் இல்லாமையே.
எனவே இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களை பெற்று கொடுப்பதுடன் எமது மாவட்டத்தை அழிவில் இருந்தும் பாதுகாக்கவேண்டுமென மக்கள் கேட்டுள்ளனர்.
அழிவுகளையும் சந்தித்த மக்களிடம் அதிக நம்பிக்கை இருக்க வேண்டும்!
நீண்டகாலம் வன்முறைகளினாலும், அழிவுகளையும் சந்தித்த மக்களிடம் அதிக நம்பிக்கை இருக்க வேண்டும் என கூறியிருக்கும் கனடா நாட்டின் ரொரன்ரோ மாநகர மேயர் ஜோன் ரொறி, அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படும்போது நல்லிணக்கம் மற்றும்நீதிக்கான பாதையில் அந்த நம்பிக்கை மக்க ளிடம் உண்டாகும் என தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட ஜோன் ரொறி முல்லைத்தீவு- முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் முல்லைத்தீவு மாவட்ட மக்களை சந்தித்து உரையா டியிருந்தார்.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நீண்டகாலம் வன்முறைகளினாலும், அழிவுகளாலும் பாதிக்கப்பட்ட மக்களிடம் நம்பிக்கை இருக்க வேண்டும்.
அந்த நம்பிக்கை என்பது உங்களுடைய அடிப்படை பிரச்சினைகளும், மீனவர் பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினை, மீள்குடியேற்ற பிரச்சினை போன்றனவும் தீர்க்கப்படும்போது நீதிக்கான நல்லிணக்கத்திற்கான பாதையில் உருவாகும் எ ன நான் நம்புகிறேன்.
மேலும் புலம்பெயர் தமிழர்கள் எம்மை விடவும் கஸ்டப்பட்டு உழைத்து எமக்கு முன் உதாரணமாக திகழ்கின்றார்கள்.
இந்நிலையில் இங்கே பல விடயங்களை நேரடியாக பார்த்தும், முதலமைச்சர் ஊடாக கேட்டும் அறிந்திருக்கின்றேன். அந்த வகையில் கனடா சென்றதும் இந்த பிரச்சினைகள் தொடர்பாக பேசுவேன்.
அதேபோல் கல்வி தொடர் பாக முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கான தீர்வினை நிச்சயமாக வழங்குவேன் என்றார்.