டொறன்டோ மாநிலம் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தினை இணைப்பதற்கான உடன்படிக்கை உத்தியோகப்பூர்வமாக கைச்சாத்து
கனடா டொறன்டோ மாநிலத்தினையும், யாழ்ப்பாணம் மாவட்டத்தினையும் இணைப்பதற்கான உத்தியோகபூர்வான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
குறித்த உடன்படிக்கை யாழ்.பொதுநூலகத்தில் இன்று மதியம் சம்பிரதாயூர்வமாக கைச்சாத்திடப்பட்டது.
கனடா டொறன்டோ மாநிலத்தின் முதல்வர் ஜோன் ரொர்ரி மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் யாழ்.மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
யாழ்.மாவட்டத்தின் கல்வி மற்றும் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அங்கு டொறன்டோ மாநில முதல்வர் ஜேனர் ரொர்ரி இலங்கைக்கு வெளியில் உள்ள தமிழ் மக்கள் ஒன்றுகூடி வாழும் இடம் டொறின்டோ மாநிலமாக இருக்கின்றது. எனவே, கனடாவின் உதவி எப்போதும் கிடைக்குமென உறுதியளித்துள்ளார்.
இதன்போது யாழ்.மாவட்டத்தினையும் டொறின்டோ மாநிலத்தினையும் இணைப்பதற்கு என்னென்ன எண்ணங்கள் இருக்கின்றன என்பது பற்றியும் அங்கு கலந்துரையாடப்பட்டது.
நீர் மற்றும் பொருளாதாரத்தினை மேம்படுத்துவது நீர் முகாமைத்துவம், பொருளாதார விருத்திக்கு புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் பங்களிப்பு கட்டாயம் கிடைக்கும் என்றும் எதிர்காலத்தில் யாழ்.மாவட்டத்தின் பொருளாதாரத்தினை மேம்படுத்த கனடா அரசாங்கம் உதவிகளை மேற்கொள்ளுமென்றும் உறுதியளித்துள்ளனர்.
அதன்போது, வடமாகாண முதலமைச்சர் வடமாகாணத்தின் வரைபடத்தினை விசேட வகையில் அமைத்து, அவருக்கு நினைவுப் பரிசாக வழங்கினார். அதேபோன்று டொறன்டோ முதல்வரும் முதலமைச்சருக்கு நினைவுப் பரிசில்களையும் வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில், வடமாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.