தமிழர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மார்க்கம் தோர்ண்ஹில் மத்திய இடைத் தேர்தல்
தமிழர்கள் செறிந்து வாழும் மார்க்கம் நகரிலுள்ள மார்க்கம் – தோர்ண்ஹில் தொகுதியில் எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி மத்திய பாராளுமன்றத்துக்கான இடைத் தேர்தல் நடபெறவிருக்கிறது.
நீண்ட காலமாக இத் தொகுதியைப் பிரதி நிதித்துவப் படுத்தி வந்த லிபரல் கட்சியின் உறுப்பினர் ஜோன் மக்கலம் பதவி துறந்ததைத் தொடர்ந்து இத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இத் தேர்தலில் இம் முறை ஏழு வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதில் தமிழ் சமூகத்திலிருந்து ராகவன் பரம்சோதி எனப்படும் ஒரே ஒரு தமிழர் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
ஆனாலும் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இத் தேர்தல் பல சர்ச்சைகளுக்கு உட்பட்டு வருகிறது.
இத் தொகுதியில் வாழும் தமிழ்ப் பெண்ணான யுவனித்தா நாதன் என்பவர் இம் முறை லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிடப் போவதாக முற்கூட்டியே அறிவித்திருந்தது.
இது தமிழர்கள் செறிந்து வாழும் தொகுதியென்பதாலும், பல்லாண்டு காலமாக லிபரல் கட்சியே வெற்றியீட்டி வந்ததாலும் அவரது வெற்றி ஓரளவு உறுதி என்ற நிலைமைதான் இருந்தது.
ஆனால் கட்சியின் தலைமை மிகவும் சூட்சுமமாகக் காய்களை நகர்த்தி யுவனித்தா நாதனுக்கு வேட்பாளர் தேர்தலில் வெற்றி கிட்டாதவாறு சீன இனத்தைச் சேர்ந்த மேறி எங் என்பவருக்கு வேட்பாளர் தேர்தலில் வெற்றியீட்டும் வழி வகைகளைச் செய்தது.
மேறி எங் குறித்த தொகுதியில் வாழ்பவரோ அல்லது இத்தொகுதி வாழ் மக்களுக்கு எந்தவித சேவைகளை வழங்கியவரோ அல்ல. மாறாக அவர் கட்சித் தலைமை அலுவலகத்தில் பிரதமர் ஜஸ்டின் ட் ரூடோ வுக்கு உதவியாளராகப் பணி புரிந்தவர்.
லிபரல் கட்சின் இந்த ஜன நாயகமற்ற நடவடிக்கை இத் தொகுதிவாழ் தமிழ் மக்களை சினம் கொள்ள வைத்தது மட்டுமல்ல கட்சியைத் தோற்கடிப்பதன் மூலம் கட்சிக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் எடுக்க வைத்திருக்கின்றது.
இன் நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பாக தமிழர் அமைப்புக்களும், சமூகத் தலைவர்களும் ராகவன் பரம்சோதியை வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளனர்.
யுவனித்தா நாதன் லிபரல் கட்சி சார்பில் போட்டியிடுவதாக அறிவித்ததனால் ராகவன் முன்னரே போட்டியில் இறங்காமல் இருந்தார் எனச் கூறப்படுகின்றது. யுவனித்தா போட்டியிலிருந்து விலகியமையால் தற்போது ராகவன் போட்டியில் இறங்கியுள்ளார்.
கடும் விசனத்திலிருக்கும் தமிழ் வாக்காளர்களும் இதர சமூகத்தினரும் ராகவனுக்கு தமது ஆதரவை வெளிக்காட்டியுள்ளார்கள்.
இருப்பினும் வெற்றியை உறுதி செய்ய வேண்டுமானால் ஒட்டுமொத்தமாக வாக்களிக்கத் தகுதியுள்ள அத்தனை தமிழர்களும் வாக்களிக்க வேண்டுமென்பதே தமிழர் சமூகத்தின் வேண்டுகோள்.
ராகவன் பரம்சோதியைப் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பதன் மூலம் கனடியத் தமிழர் சமூகம் மூன்று பிரதான கட்சிகள் சார்பிலும் அங்கத்தவர்களைத் தெரிவு செய்த பெருமையைப் பெற்றுக் கொள்ளும்.
– See more at: http://www.canadamirror.com/canada/82967.html#sthash.mfZFD6BL.dpuf