பன்னாட்டு சுயாதீன விசாரணையே ஈழத்தமிழர்களுக்கு உண்மையான நீதியை நிலைநாட்டும்: திருச்சோதி
ஸ்ரீலங்கா அரசாங்கமானது 2015 ஆண்டு ஒக்டோபர் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் கூறப்பட்ட முக்கிய விடயங்களை மதிக்காமல், அங்கு வழங்கிய வாக்குறுதிகளை வழங்கப்பட்ட காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தாமல்,
இந்த விடயம் சார்ந்த முக்கிய சர்வதேச உதவிகளை நிராகரிக்கும் வகையில் தனது நிப்பாட்டை கொண்டுள்ளது என அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் வெளிவிவகார அரசியல் ஒருங்கிணைப்பாளர் திருச்சோதி தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்ட தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகின்றது.இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
ஒரு புறம் நல்லாட்சி அரசாங்கம் எனும் வேடம் தரித்தபடி சர்வதேசத்தை ஏமாற்றி வருகின்றது. மறுபுறம் தமிழர் தாயகத்தில் பல்வேறு மனிதவுரிமை மீறல்களை மேற்கொண்டு வருகிறது.
இந் நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு எவ்வித காலநீடிப்பும் வழங்காத வகையில் பன்னாட்டு சுயாதீன விசாரணையே ஈழத்தமிழர்களுக்கு உண்மையான நீதியை நிலைநாட்டும்.
ஐ.நா மனித உரிமை பேரவையில் தொடர்ச்சியாக பல முறைகள் இலங்கை தொடர்பாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டாலும் தமிழர் தாயகத்தில் இன்றும் பல்வேறு வகையில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
தமிழ் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், தமிழர்கள் காணிகள் அபகரிப்பு , தமிழர் தாயகத்தில் சிங்கள ராணுவ பிரசன்னம் ,இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த நிலத்தில் மீள் குடியேற முடியாதநிலை என்கிற பல விடயங்களில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறவில்லை.
இந்நிலையில் இவ் அனைத்து சர்வதேச குற்றங்களையும் இழைத்த இனவழிப்பு சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் உள்ளக நீதி விசாரணை பாதிக்கப்பட்ட மக்களுக்கு எக்காலமும் நீதியை நிலைநாட்டாது.
மேலும், இப்பொறிமுறையில் தமிழ் மக்களுக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை. பன்னாட்டு சுயாதீன விசாரணை ஒன்றே ஈழத்தமிழர்களுக்கு உண்மையான நீதியை நிலைநாட்டும் என தனது உரையில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் வெளிவிவகார அரசியல் ஒருங்கிணைப்பாளர் திருச்சோதி வலியுறுத்தியுள்ளார்.