பிரான்ஸ் பள்ளிக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியது யார்?
பிரான்ஸ் நாட்டில் உள்ள பள்ளி ஒன்றில் திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்திய மர்மநபர் தொடர்பாக பள்ளி மாணவன் ஒருவனை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தெற்கு பிரான்ஸில் உள்ள Grasse நகரில் Alexis de Tocqueville என்ற பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் திடீரென்று மர்மநபர் ஒருவர் நுழைந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டால் இரண்டு மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் ஒருவர் படுகாயமடைந்தனர். மேலும் ஐந்து பேர் தப்பி ஓட முயற்ச்சி செய்த போது காயமடைந்துள்ளனர்.
இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு காரணம் Killian Barbey என்ற மாணவன் தான் எனவும் பள்ளியில் மதிய இடைவெளியின் போது இந்த தாக்குதலை நடத்தியுள்ளான் என்றும் கூறப்படுகிறது.
இத்தாக்குதலுக்கும் தீவிரவாதிகளுக்கும் எந்த ஒரு தொடர்பும் கிடையாது என்று கூறப்படுகிறது.
இது குறித்து பொலிசார் கூறுகையில், தாக்குதல் நடத்திய மாணவனின் இணையதளங்களை சோதனை செய்து பார்த்ததில், சில மோசமான மற்றும் ஆபத்தான துப்பாக்கிசூடு போன்ற வீடியோக்களை பார்த்துள்ளார் என்று கூறியுள்ளனர்.
இத்தாக்குதல் நடத்துவதற்கு காரணம் அமெரிக்காவின் பள்ளிகளில் இது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்வதால் அதைக் கண்டு மாணவன் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளான் என்றும் அவனுடைய சமூகவலைத்தளத்தில் அவன் கடைசியாக துப்பாக்கியை வைத்துள்ளது போன்று புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளான் என்றும் கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி ஜோக்கர் மேன் முகத்திரை போல் அணிந்து துப்பாக்கியை வைத்து அவன் செய்த செயல் தொடர்பான வீடியோவை அவன் சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளான் என்றும் கூறியுள்ளனர்.
மேலும் இத்தாக்குதலை இரண்டு பேர் நடத்தியதாக கூறப்படுகிறது. அதனால் பொலிசார் இது தொடர்பாக தீவிரவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.