சந்திராயனை கண்டுபிடித்தது நாசா..!
விண்வெளி ஆய்விற்காக அனுப்பப்பட்டு, கடந்த 8 வருடங்களாக காணாமல் போயிருந்த, இந்தியாவின் முதலாவது விண்கலமான சந்திராயன் -1 நாசாவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவால் கடந்த 2008 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டு, 2009 ஆம் ஆண்டு தொடர்பிழந்த நிலையில் இருந்த சந்திராயன் – 1, 8 வருடங்கள் கடந்த நிலையில், கலிபோர்னியாவில் இயங்கும் நாசா ஆய்வு மையத்தின் ஜெட் பிரபல்ஷன் ஆய்வகம் நடத்திய ஆய்வின் மூலம், குறித்த விண்கலம் அமைதியாக சந்திரனைச் சுற்றி வலம் வருவதைக் கண்டுபிடித்துள்ளது.
இந்தியாவிலிருந்து முதலாவதாக அனுப்பப்பட்ட விண்கலமான சந்திராயன் – 1, ஆந்திரப்பிரதேசத்திலுள்ள ஹரிகோட்டா விண்வெளி ஏவு தளத்திலிருந்து கடந்த 2008 ஆம் ஆண்டு ஏவப்பட்டு, 2009 ஆண்டு அதன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ராடர் தொலைநோக்கி கருவியூடாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம், குறித்த விண்கலம் சந்திரனை சுற்றி வலம் வருவதாக, ஜெட் பிரபல்ஷன் ஆய்வகம் அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.