எடப்பாடி ஜெயிச்சது எப்படி… திவாகரன், கவர்னர் சந்திப்பின் பின்னணியா?
அ.தி.மு.க சட்டமன்றக் குழுவின் புதிய தலைவராக எடப்பாடி பழனிச்சாமி பதவியில் நியமிக்கப்பட்ட பிறகு, அவரும் அவர் தரப்பினரும் கவர்னரைச் சந்தித்தனர்.
அப்போது, ‘ஆட்சியமைக்க எப்போது அழைப்பீர்கள்’ என்று கேட்டுள்ளனர். அதற்கு, கவர்னரிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.
இதற்கிடையில் திவாகரனும் அவரது மகனுமான ஜெய் ஆனந்தும் கவர்னரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். அதன் பிறகே, எடப்பாடியை கவர்னர் அழைத்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.
இதன் பின்னணி பற்றிதான் அ.தி.மு.க-வினர் பரபரப்பாகப் பேசி வருகின்றனர். சசிகலா ஆதரவு அமைச்சர் ஒருவர், “எங்கள் தரப்பினர் கவர்னரைச் சந்தித்தபோது போதிய எம்.எல்.ஏ-க்கள் பலம் இருப்பதைப் புரிந்துகொண்டார். எங்களுக்கு உதவி செய்ய அவர் முடிவுசெய்தார்.
ஆனால், அவரை இயக்கும் ரிமோட், பி.ஜே.பி மேலிடம் கையில் இருந்ததால்… அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. அந்த ரிமோட்டின் பிடியிலிருந்து விடுவிக்க சில அரசியல் ரீதியான காயை நகர்த்தும்படி நேரடியாகச் சொல்லாமல் சாடைமாடையாக சொல்லியுள்ளார்.
இதை எங்கள் தரப்பினர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அதுதான் ஆட்சியமைக்கும் படலம். ஒருகட்டத்தில், கவர்னர் தரப்பினர் தற்போது சந்திக்க வந்தவர்களெல்லாம் சரிபட்டு வரமாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
கவர்னர் தரப்புக்கும் சசிகலா தரப்புக்கும் அறிமுகமான பொதுவான நண்பர்கள் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்கள். 1988-ல் இதுபோன்று ஒரு சூழல் வந்தபோது ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மன்னார்குடி திவாகரன்தான் அரசியல் ஆலோசனை சொல்லிச் செயல்பட்டார்.
அதே திவாகரன், இப்போதும் இருக்கிறார். அவரை, தற்போது கவர்னரைச் சந்திக்க வரவழைக்கலாம் என்ற முடிவை எடுத்திருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து கவர்னர், திவாகரன் சந்திப்பு நடந்திருக்கிறது.
இந்தச் சந்திப்பின்போது திவாகரன் தனது மகன் ஜெய் ஆனந்தை அழைத்துச் சென்றார். கவர்னர் சொன்ன சில முக்கியத் தகவல்களை திவாகரன் கவனமாகக் கேட்டுக்கொண்டு தலையாட்டிவிட்டு வந்திருக்கிறார்.
அதைத் தொடந்து சில ரகசிய நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறார். அடுத்த நாளே கவர்னரிடமிருந்து அ.தி.மு.க-வை ஆட்சியமைக்கக்கோரி அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது” என்றார், அந்த அமைச்சர்.
இந்த அடிப்படையில் பார்க்கும்போது, அ.தி.மு.க-வை ஆட்சியமைக்க கவர்னர் கூறியதற்கு பின்னணியில், திவாகரன் இருந்தார் என்ற தகவல் அ.தி.மு.க பிரமுகர்கள் மத்தியில் பரவியதும் திவாகரன் மீதான இமேஜ் உயர்ந்திருக்கிறது.