கேப்பாப்புலவு மக்கள் போராட்ட இடத்தில் ஒலித்தது சம்பந்தனின் குரல்
கேப்பாப்புலவு மக்கள் தமது காணிகளை விமானப்படையினரிடம் இருந்து மீட்பதற்காக தொடர்ந்து 15 நாட்களாக இன்று கவனஈர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இன்று இரவு 7.00 மணியளவில் அங்கு சென்ற கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அந்த மக்களின் நிலைமை தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளதோடு, அவர்கள் போராட்டத்திற்கு வலுச்சேர்ப்பதற்காக ஆதரவான போராட்டங்கள் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா. சம்பந்தனுக்கு, அவர் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனிடம் பேசும்படி கொடுத்துள்ளார்.
குறித்த தொலைபேசி அழைப்பின் ஊடாக ரவிகரன் சம்பந்தனுடன் நேரடியாகவே பேசி அங்குள்ள மக்களின் நிலைமையை எடுத்துச் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதே வேளை, குறித்த மக்கள் போராட்ட இடத்திற்கு நேற்று சமநேரத்தில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன் மற்றும் சாந்தி சிறிஸ்கந்தராசா இருவரும் சென்று அந்த மக்களுடன் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.