ஆபத்தில் அமெரிக்காவின் உயரமான அணை : (காணொளி இணைப்பு)
அமெரிக்காவின் உயரமான அணையான கலிபோர்னியாவிலுள்ள ஒரோவிலே அணை, இடியும் அபாயம் காணப்படுவதால் சுமார் 2 இலட்சம் பேரை குறித்த பிராந்தியத்திலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு வேண்டப்பட்டுள்ளது.
வடக்கு கலிபோர்னியாவில் சுமார் 230 மீற்றர் உயரமுள்ள ஒரோவிலே அணையில், நீர் நிரம்பி வழியும் நிலையில் அணையின் அவசர நீர் வெளியேற்றும் வான்கதவுகள் எந்நேரத்திலும் உடையும் அபாயம் காணப்படுவதால், குறித்த பகுதியில் வாழும் மக்களை உடனடியாக வெளியேறும் படி அம்மாநில திட்டமிடல் ஆணையம் அறிவித்துள்ளது.
கனமழையாலும், பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஏற்பட்ட பனி உருக்கத்தாலும் இந்நீர்தேக்கத்தின், நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் குறித்த பிராந்தியத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 50 வருடங்களில் முதல்முறையாக ஒரோவிலே குளத்திலிருந்து, நிமிடத்திற்கு ஒரு லட்சம் கன அடி நீரை வெளியேற்றும் நிலை உருவாகியுள்ளதாக கலிபோர்னியாவின் நீர்வளத் திட்டமிடல் துறை தெரிவித்துள்ளது.
அத்தோடு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், ஒரோவிலே பகுதிக்கு யாரும் பயணம் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.