கூவத்தூரில் இருந்து மாறுவேடத்தில் தப்பி பிழைத்து வந்தேன்: சசிகலாவிடம் சிக்கிய எம்எல்ஏ அதிர்ச்சி தகவல்
கூவத்தூரில் சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருந்ததாக கூறப்படும் சொகுசு ஓட்டலில் இருந்து மதுரை எம்.எல்.ஏ சரவணன் மாறுவேடத்தில் தப்பி பிழைத்து வந்தேன் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக எம்எல்ஏக்கள் பலர் சசிகலாவுக்கு ஆதரவாக கூவத்தூரில் உள்ள சொகுசு ஓட்டல்களில் தங்கியுள்ளனர். அவர்கள் அனைவரையும் சசிகலா வற்புறுத்தியே அடைத்து வைத்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அங்கிருந்து தப்பி வந்த மதுரை எம்எல்ஏ சரவணன் முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தார். அதன் பின்னர் அவர் கூறுகையில், நான் ஒரு பொறியாளர். அடைத்து வைக்கப்பட்டிருந்த கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து திட்டமிட்டு மாறு வேடத்தில் தப்பித்து வந்தேன்.
அடைத்து வைக்கப்பட்டிருந்ததால் உடலளவில், மனதளவில் மிகவும் பாதிப்பு ஏற்பட்டது. சசிகலாவிடம் மாட்டிக்கொள்வேன் என அச்சத்துடன் தப்பித்து வந்தேன். ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் ஆட்சி அமைப்பது உறுதி.
அங்கிருக்கும் எம்.எல்.ஏக்கள் பலரது எண்ணமும் இங்கு வரவேண்டும் என்பதுதான். சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கும் கட்டாயம் வந்தால், எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு பன்னீர் செல்வம் தான் வெற்றி பெறுவார் என்று கூறியுள்ளார்.