சசிகலாவை நெருங்கிவரும் ஆபத்துக்கள்? உற்சாகத்தில் பன்னீர்! – ஓபிஎஸ்ஸிற்கு முதல்வர் நாற்காலி?
தமிழகத்தின் பக்கம் திரும்பியிருக்கிறது முழு இந்தியாவின் பார்வை. தமிழகத் தமிழர்கள் மாத்திரமல்ல, உலகத் தமிழர்களும் இன்றைய அரசியல் களத்தை வேடிக்கையோடு, விரக்தியோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
விசுவாசத்தின் அடையாளமாக, பணிவின் இலக்கணமாக இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். தமிழகத்திற்கு தன் தலைவியால் முதலமைச்சராகுமாறு பணித்த உத்தரவை சிரம் ஏற்றவர். மீண்டும் தன் தலைவி மீண்டு வர அவருக்கு வழிவிட்டவர்.
இன்று தன் தலைவியின் கட்சிப்பொறுப்பை, ஆட்சிப்பொறுப்பை அவர் வழி ஏற்பேன் என்கிறார் பன்னீர்.
அவருக்கு இந்தத் துணிவு எங்கிருந்து வந்தது என்பதற்கான ஆரம்பமே நாளை வெளிவரும் சொத்துக் குவிப்பு வழக்கிற்கான முடிவுதான்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரின் தோழியான சசிகலா மீது சுமத்தப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கிற்கான தீர்ப்பு நாளை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு வெளிவரும் வழக்கின் முடிவுகள் கட்டாயம் சசிகலாவிற்கு பாதகமானது தான் என்று உறுதிபடக்கூறுகிறார்கள் சட்டவல்லுநர்கள்.
இதன் காரணமாகவே தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தனது முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதத்தைக் காட்டுகின்றார் என்று விளக்கமளிக்கும் விமர்சகர்கள், பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தைக் கொண்டு இருக்கும் சசிகலா ஆட்சியமைப்பதில் தடையில்லை.
ஆனால் அவருக்கு எதிரான வழக்கின் முடிவிற்காக காத்திருக்கிறார்கள் என்கிற வாதமும் ஏற்புடையதாக கருதப்படுகிறது.
எனினும் இந்த தாமதம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை ஓ. பன்னீர்செல்வம் பக்கம் இழுப்பதற்கான கால அவகாசம் என்றும் பன்னீரை ஆட்சியில் அமர்த்துவதற்கான முடிவில் மத்திய அரசாங்கம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் பன்னீர்செல்வத்திற்கான ஆதரவோ இன்றைய தினம் பன்மடங்காக அதிகரித்து விட்டது. இதனால் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார் அவர்.
இந்திய அரசியல் வரலாற்றில் ஒருவர் அதிகாரத்திற்கு வருவதற்கான எதிர்ப்பை இவ்வளவிற்கு சந்திக்கிறார் என்றால் அது சசிகலா தான்.
இதனால் பன்னீருக்கான முதலமைச்சர் நாற்காலி இன்றளவோடு உறுதியாகி விட்டது. சசிகலாவின் எதிர்கால தீர்ப்பின் இறுதியான முடிவு நாளை?
தமிழகத்தை கலக்கும் அரசியல் பரபரப்பும் சலசலப்பும் இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என்பது உறுதி.