சுதந்திர தமிழ் தேசம் அமைக்கப்பட்டால் இந்தியப்படை இலங்கையில்..! CIA தகவல்
இலங்கை படைகள் மீது தமக்கு பெரியளவில் நம்பிக்கை இல்லை என முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல், அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிஐஏ) இரகசிய ஆவணம் ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பில் 1980ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கத்தில் நிதியமைச்சராக இருந்த ரொனி டி மெல் அமெரிக்க அதிகாரிகளிடம் தனிப்பட்ட முறையில் வெளியிட்ட கருத்து அந்த அறிக்கையில், இடம்பெற்றிருக்கிறது.
இது குறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தாம் இலங்கை ஆயுதப்படைகளிடம் சிறியளவு நம்பிக்கை மாத்திரமே கொண்டிருப்பதாக தெரிவித்தார் என்று அமெரிக்க தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாகவே, அமெரிக்காவை விமர்சிக்காமல் இருப்பதில் கவனமாக இருக்கும் ரொனி டிமெல் கடந்த ஏப்ரல் மாதம், தனது நாட்டுக்கு அருகில் இருக்கும் இந்தியா, ஏனைய சக்திகள் இலங்கைக்கு உதவுவதை விரும்பவில்லை என தெரிவித்திருந்தார்.
அத்துடன், இந்தியா தனது படைகளை துரிதமாக விரிவாக்கிக் கொண்டிருப்பதாகவும், இலங்கையில் தலையீடு செய்வதற்கு அவற்றைப் பயன்படுத்தக் கூடும் என்றும் அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தனது கடல் எல்லைகளை பாதுகாப்பதற்கே படைகளைப் பலப்படுத்துவதாக இந்தியா தெரிவித்திருந்தாலும், இலங்கை அரசாங்கம் வீழ்ச்சியடைந்தாலோ,
அல்லது கிளர்ச்சியாளர்கள் சுதந்திர தமிழ் தேசம் ஒன்றை உருவாக்கினாலோ, தனது படைகளை இலங்கைக்கு அனுப்பும் என்று நாம் நம்புகிறோம்” என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.