பத்து இலட்சத்திற்கு இராணுவ அடிமையாக்கப்படும் தமிழர்கள்! கிளிநொச்சியில் இராணுவப் பயிற்சி
மகிந்த ராஜபக்சவின் இராணுவ அடாவடிகள் நிறைந்த ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது,
நல்லாட்சி ஏற்பட்டுள்ளது என்ற நம்பிக்கையில் தமிழ் மக்கள் ஓரளவு நிம்மதிப் பெருமூச்சு விட்ட நிலையில் வடக்கை மீண்டும் இராணுவ மயமாக்கும் நோக்குடன் மக்களின் இயல்பு வாழ்க்கைக்குக் குந்தகம் ஏற்படுத்தும் வகையில் இராணுவச் செயற்பாடுகள் தீவிரம் பெற்றுள்ளன.
கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற யுத்தத்தால் பாரிய அழிவைச் சந்தித்த பகுதிகளில் மக்கள் தமது வாழ்வாதாரங்கள் அனைத்தும் இழந்தவர்களாக பரிதவித்த வேளை வேலைவாய்ப்பு என்னும் தோரணையில் கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் வேலையற்றிருந்த இளைஞர், யுவதிகளை சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினூடாக வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி,
முன்பள்ளி ஆசிரியர்களாகவும், விவசாயப் பண்ணைத் தொழிலாளர்களாகவும், விவசாய நடவடிக்கை மேற்பார்வையாளர்களாகவும் அவர்களை நியமித்த இலங்கை அரசாங்கம் தமது சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினூடாகவே அவர்களுக்கான சம்பளத்தையும் வழங்கி வந்தது.
மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் சிவிப் பாதுகாப்புத் திணைக்களத்தினூடாக நியமனம் பெற்ற முன்பள்ளி ஆசிரியர்கள், விவசாயப் பண்ணைத் தொழிலாளர்கள் போன்றோரைப் பயன்படுத்தி இராணுவத்தின் மூலம் கிராம மட்ட அமைப்புக்களைத் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தன.
குறிப்பாக முன்பள்ளி ஆசிரியர்களைப் பயன்படுத்தி முன்பள்ளிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் இராணுவத்தையே விருந்தினர்களாக கலந்துகொள்ள வைப்பது முதற்கொண்டு முன்பள்ளிச் சிறார்களின் சீருடைகளையும் இராணுவமே வடிவமைத்து அதில் தமது சின்னத்தைப் பொறித்திருந்தது.
மற்றும் சிவில்பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் நியமனம் பெற்றவர்களைப் பயன்படுத்தி கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம் போன்ற கிராம மட்ட அமைப்புக்களிலும் இராணுவம் தமது தலையை நுழைத்து வந்தது.
இதில் பலர் நிர்ப்பந்தம் காரணமாக இராணுவத்திற்குத் தகவல் வழங்குநர்களாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளார்கள்.
இவ்விடயம் தொடர்பில் கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் போன்றோரால் பலதடவைகள் பாராளுமன்றம் உட்பட பல இடங்களிலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்துள்ளமையும் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
மகிந்த ராஜபக்சவின் இராணுவ அடாவடிகள் நிறைந்த ஆட்சி முடிந்து மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சி ஏற்பட்டதன் பின்னர் இராணுவ அடாவடிகள் ஓரளவுக்குக் குறைந்திருந்த நிலையில் தற்போது யுத்தத்தால் பாரிய பாதிப்புக்களைக் கொண்ட கிளிநொச்சி, முல்லைத்தீவுப் பகுதிகளில் தமிழ் மக்களை இராணுவ மயமாக்கும்
நோக்கத்துடன் திட்டமிட்டு சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் நியமனம் பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களையும் பண்ணைத் தொழிலாளர்களையும் இராணுவக் கட்டமைப்புக்குள் உள்வாங்கி அவர்களது விருப்புக்கு மாறாக கட்டாயப்படுத்தி இராணுவப் பயிற்சியளிக்கப்பட்டு வருகின்றது.
தமிழ் மக்களை இராணுவக் கட்டமைப்புக்குள் கொண்டுவந்து தொடர்ந்தும் இராணுவ அடக்கு முறையின் கீழ் வைத்திருப்பதற்கான இந்நடவடிக்கையானது நன்கு திட்டமிடப்பட்ட முறையில் அரங்கேற்றப்பட்டு வருகின்றது.
அதாவது யுத்தத்தால் பேரிழப்புக்களை எதிர்நோக்கிப் பாதிக்கப்பட்ட நிலையில் குடும்ப வறுமை காரணமாக சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் முன்பள்ளி ஆசிரியர்களாகவும் பண்ணைத் தொழிலாளர்களாகவும் உள்ளவர்களுக்கு பத்து இலட்சம் ரூபா கடன் தொகையை வங்கிகள் ஊடாக சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின்
உயரதிகாரிகள் வழங்கி வைத்திருந்த நிலையில் அக்கடன்களை அவர்களது மாதாந்தச் சம்பளப் பணத்திலிருந்தே வங்கிகள் அறவிட்டு வருகின்றன.
இந்நிலையில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் பணிபுரியும் முன்பள்ளி ஆசிரியர்களையும் பண்ணைத் தொழிலாளர்களையும் இராணுவக் கட்டமைப்பின் கீழ்க் கொண்டு வருவதற்காக
இராணுவ ஆயுதப் பயிற்சி வழங்கப்படுவதனை ஏற்றுக் கொள்ளாதவர்கள் தாம் இராணுவப் பயிற்சியைப் பெற விரும்பவில்லை அதனைத் தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என மறுத்தவர்களிடம் அவர்களைப் பயிற்சிக்காக அழைத்துச் செல்ல வந்த இராணுவ உயரதிகாரிகள் ‘நீங்கள் இராணுவ ஆயுதப் பயிற்சியைக் கட்டாயம் பெற்றே ஆக வேண்டும்.
அப்படிப் பெற மறுத்தால் நீங்கள் உடனடியாகவே உங்கள் வேலையை விட்டு விலக வேண்டும்’ எனக் கூறிக் கட்டாயப்படுத்தியுள்ளார்கள். இதனால் பத்து இலட்சம் ரூபா பணத்தைப் பெற்று தமது தேவைக்காகச் செலவு செய்தவர்கள் இவ்வேலையை இழந்தால் தாம் எப்படி அக்கடன் தொகையை வங்கிகளுக்குச் செலுத்துவது என ஏங்கிக் குழப்பமடைந்து தமது நிலை இராணுவ அதிகாரிகளிடம் கூறிக் கண்ணீர் விட்டுக் கதறி அழுதுள்ளார்கள்.
அதனை அவர்கள் கருத்திற்கொள்ளாது அவர்களை இராணுவப் பயிற்சிக்கு அழைத்துச் சென்றுள்ளதாகக் கூறிக் கவலையும் விசனமும் தெரிவிக்கப்படுகின்றது.
வேலைவாய்ப்பு என்னும் போர்வையில் முன்பள்ளி ஆசிரியர்களாகவும் பண்ணைப் பணியாளர்களாகவும் நியமிக்கப்பட்டவர்களுக்குப் பத்து இலட்சம் ரூபாய் கடன் வழங்கி அவர்களை முழுமையாக இராணுவக் கட்டுப்பாடடின் கீழ் கொண்டு வந்துள்ளமையானது பத்து இலட்சம் ரூபா பணத்திற்கு தமிழர்களை இராணுவத்திற்கு அடிமையாக்கியதாகவே நோக்கப்படுகின்றது.