கிழக்கிலும் வெல்லட்டும் எழுக தமிழ் பேரணி: முடியட்டும் இருளின் ஆதிக்கம்..! விடியட்டும் தமிழர் வாழ்வு.!
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறவிருக்கும் எழுக தமிழ் பேரணிக்கு வாழ்த்து தெரிவித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பெருந்திரள் மக்கள் எழுச்சியின் முன்பு தில்லியோ, வாசிங்கடனோ அல்லது எந்த உலக வல்லரசோ மண்டியிட்டே தீர வேண்டும் என்பது மீண்டும் ஒரு முறை மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு உரிமைக்காக நடந்த தமிழர் தம் எழுச்சி தில்லிச் சக்கரவர்த்திகளை அடிபணியச் செய்துள்ளது. மாணவர்கள், இளைஞர்களால் தொடங்கப்பட்ட எழுச்சி மக்கள் திரள் ஆதரவைப் பெற்றதுடன் பெண்கள், குழந்தைகள் என குடும்பம் குடும்பாய் பங்கேற்கச் செய்தது.
இந்த பங்கேற்பு தான் அடக்கியாள எண்ணியவர்களை அச்சமுற செய்தது. இது போன்ற எழுச்சி இலங்கைக்கும் புதியதல்ல. இந்தப் போராட்டம் 1961 இல் தந்தை செல்வநாயகம் தலைமையில் நடந்த சத்தியாகிரகப் போராட்டத்தை நினைவுபடுத்துகிறது.
ஜனவரி 26 ஆம் திகதி இந்தியக் குடியரசு நாள் கொண்டாட்டம் வேலிகளுக்குள் மக்கள் பங்கேற்பின்றி நடந்து முடிந்தது. பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கை சுதந்திர நாள் தமிழ் மக்களால் பல ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
கொழும்பின் கொண்டாட்ட இரைச்சல்களை விட யாழ்ப்பாணத்தில் காணாமற்போனோரின் தாய்மார்கள் கண்ணீர் விட்டு கதறிய அழுகுரல்கள் தான் எங்களுக்கு கேட்கின்றது.
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் பறிக்கப்பட்ட தங்களது நிலங்களை மீளத் தருமாறு கோரி 6 ஆவது நாளாக இராணுவத்தின் விமானப் படைத்தளம் முன்பு கைக் குழந்தைகளுடன் நமது உறவுகள் இரவு பகலாக போராடி வருகின்றனர்.
இலங்கை சுதந்திர நாள் தங்களுக்கு கறுப்பு நாள் என்றும் அறிவித்துள்ளனர். புதுக்குடியிருப்பிலும் மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
வவுனியாவில் காணாமற்போனோரின் தாய்மார்கள் தமது உறவுகள் எங்கே என்று கேற்கும் படி காலவரையற்றப் பட்டினிப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர் இப்படி வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் தமிழ் மக்கள் கண்ணீருடன் போராடி வருகின்றனர்.
குவிக்கப்பட்டுள்ள உங்கள் இராணுவத்தாலும் துப்பாக்கிக் குண்டுகளாலும் அடக்க முடியாதது எங்கள் சுதந்திர தாகம் என தமிழ் மக்கள் காலந்தோறும் மெய்ப்பித்து வந்துள்ளனர்.
தலைவர்களுக்காக காத்திராமல் தமிழக மாணவர்களும் இளைஞர்களும் போராட்டத்தில் குதித்தது போல் வடக்கு கிழக்கு தமிழர்களும் எழுச்சியுடன் களம் காண வேண்டிய தருணம் இது.
‘வயிறு முட்ட உண்டவர்கள் விடும் ஏப்பம் போல்’ இலங்கையில் நல்லிணக்கம் என்றும் உள்நாட்டு விசாரணையென்றும் இறையாண்மை என்றும் பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு உரிய பதில் தர வேண்டிய நாள் தான் பெப்ரவரி 10 ஆம் திகதி வடக்கு வேறு கிழக்கு வேறு என்று கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக காதில் பூ சுற்ற நினைப்பவர்களுக்கு மீண்டுமொரு முறை பதிலடித் தரவேண்டிய நாள் பெப்ரவரி 10 ஆம் திகதி, மார்ச் மாதத்தில் நடக்கவிருக்கும் ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத் தொடரை உலகமே எதிர்நோக்கியிருக்கிறது. உலகத் தமிழர்களும் எதிர்நோக்கியுள்ளனர்.
எல்லா மாய வித்தைகளையும் செய்த படி இனவெறி அரசும் ஆயத்தமாகி இருக்கிறது. ஆளும் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்கள் அடிவருடி பிழைப்பவர்களின் கணக்கை பொய்யாக்குவது மக்களே மக்களின் மனங்களில் இருக்கும் கோபத்தையும் எழுச்சியையும் விடுதலை விருப்பத்தையும் அறிந்து கொள்ளும் இயந்திரங்களோ, இராஜதந்திரிகளோ அதிகார பீடங்களிடம் இல்லை.
அத்துடன் பெப்ரவரி 10 ஆம் திகதி திரளப் போகும் மக்கள் திரளின் எண்ணிக்கை எதிரியின் தூக்கம் கலைக்கட்டும். துரோகிகள் குலை நடுங்கட்டும். உலக மக்களின் மனசாட்சியை தட்டி நீதியின் கதவுகளைத் திறக்கட்டும்.
மட்டு நகர் பேரணியில் இலட்சக்கணக்கில் மக்கள் பங்கேற்று மாபெரும் வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
கிழக்கில் இருந்தெழும் விடியலைப் போல் எழுக தமிழ் பேரணி வெல்லட்டும் மெரினாவில் நடந்த எழுச்சி மட்டு நகரிலும் தொடரட்டும்.