தீக்குளிக்க தயாரான தாய் : கேப்பாபுலவிற்கு விக்னேஸ்வரன் நேரடி விஜயம்
2009 ஆண்டு யுத்தம் காரணமாக குறித்த பகுதியை விட்டு இடம்பெயர்ந்து சென்றதாகவும், 2011 ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோது, தமது காணிகளை இராணுவத்தினர், கையகப்படுத்தியிருந்தாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தொடரும் ஐந்தாம் நாள் கருப்பு பட்டியுடன் ஆரம்பித்த போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் தமது முடிவினை தளரவிடாமல், “காலியில் சுதந்திரதினம் வீதியில் நாம், விடுதலை எமக்கு எப்போது?, எமது மண்ணை ஆக்கிரமித்து நம்மை வீதியில் அலையவிட்டு நல்லிணக்கம் பேசுதல் முறையா? ” போன்ற பதாதைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த போராட்டம் வலுப்பெறவே, அங்கு வருகை தந்திருந்த முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். முதலமைச்சரின் குறித்த விஜயத்தின் போது வட மாகாண சபை விவசாயத்துறை அமைச்சர் ஐங்கரநேசன், வட மாகாண சபை உறுப்பினர் உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், சிவநேசன் மற்றும் ரவிகரன் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டுள்ளார்.
மேலும், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அங்கு சென்று மக்களுடன் கலந்துரையாடியுள்ளதுடன், மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் விமானப்படை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். அத்துடன் போராட்டம் தொடர்பில் ஜனாதிபதி, மற்றும் பிரதமருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு வலுசேர்க்கும் முகமாக நேற்று புதுக்குடியிருப்பு பகுதியிலும் மாவட்ட செயலகம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் இன்று 2 ஆவது நாட்களாக நீடிக்கின்றது. இந்த நிலையில் தமது போராட்டங்களின் போது கொடுக்கப்பட்ட உறுதி மொழிகள் உதாசீனப்படுத்தபட்டதாகவும், எனினும் இம்முறை தாம் உறுதி மொழிகளை நம்பி போராட்டத்தை கைவிட போவதில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு தாய் , தமது காணிகளை, தமது மண்ணை மீட்டு தராத பட்சத்தில் தீக்குளிப்பதற்கு கூட தயங்கமாட்டேன் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் குறித்த பகுதிக்கு சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டு வருவதால் இவர்களுக்கான முடிவு வழங்கப்படும் என மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.