ரூ.300 கோடி பணத்தை படுக்கையாக பயன்படுத்திய நபர்: அதிரடி நடவடிக்கை மேற்கொண்ட பொலிஸ்
அமெரிக்காவில் நபர் ஒருவர் கட்டு கட்டாக பணத்தை நிரப்பி அதை படுக்கையாக பயன்படுத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள Westborough பகுதியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. இப்பகுதியில் சட்டவிரோதமான பண பரிவர்த்தனை குறித்த விசாரணை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு ஒரு நபர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
இதனையடுத்து அவரை விசாரித்த அதிகாரிகள், பின்னர் அந்த குடியிருப்பையை சோதனைக்கு உட்படுத்தினர்.
அப்போது படுக்கை ஒன்று இவர்களது சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த படுக்கையில் போர்த்தியிருந்த விரிப்பினை அகற்றிய அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
குறித்த படுக்கையானது மரத்தாலான ஒரு பெட்டி, அதில் கட்டுக்கட்டாக பணத்தை அந்த ஆசாமி அடுக்கி வைத்து அதில் போர்வையை போட்டு படுக்கையாக பயன்படுத்தி வந்துள்ளார்.
குறித்த சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம் மொத்தமும் 20,000,000 டொலர் (இலங்கை மதிப்பில் ரூ. 300,94,00,000) என தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பில் 28 வயதான பிரேசில் நாட்டவர் ஒருவரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைதான நபர் 3 பில்லியன் டொலர் பிரமிடு திட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பண மோசடியில் ஈடுபட்டவர் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஒருவருக்கு அடுத்த மாதம் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. மேலும் ஒருவர் அதிகாரிகள் பார்வையில் சிக்காமல் பிரேசிலுக்கு தலைமறைவாகியுள்ளார்.