உலகின் ‘பெரிய தலை’யைக் கொண்ட குழந்தைக்கு சிகிச்சை வெற்றி
உலகில் மிகப் பெரிய தலையை உடைய இந்தியாவின் குழந்தைக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. இதன்போது, சிறுவனின் மண்டையோட்டைச் சூழ இருந்த சுமார் நான்கு லீற்றர் திரவம் அகற்றப்பட்டது.
ம்ருத்யுஞ்சய் என்ற இந்த ஏழு மாத ஆண் குழந்தை பிறக்கும்போது ஏற்பட்ட கோளாறால், ‘ஹைட்ரோசெபாலஸ்’ என்ற நோய்க்கு ஆளானது. இதனால், இதன் தலை ஒரு பூசணிக்காய் அளவு பெரிதாகக் காணப்பட்டது.
சுமார் 96 சென்றிமீற்றர் விட்டம் கொண்டதாகக் காணப்பட்ட இந்தக் குழந்தை ஆறு வாரங்கள் தொடர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, அதன் மண்டையோட்டைச் சுற்றிலும் காணப்பட்ட திரவம் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றப்பட்டது.
இந்த சிகிச்சையினால் குழந்தையின் தலையில் விட்டம் 70 சென்றிமீற்றராகக் குறைக்கப்பட்டது. மேலும் சுமார் 2 லீற்றர் அளவு திரவம் அகற்றப்படவுள்ளது.
சிகிச்சையின் பின் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும், விரைவில் சாதாரண குழந்தைக்குரிய தோற்றத்தை அது பெற்றுவிடும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.