கனடாவின் அகதிகளுக்கான தனியார் அனுசரணை முறைமையின் ஏற்றுமதி!
ஐரோப்பா எதிர்நோக்கும் அகதி நெருக்கடியை சிறப்புறக் கையாள்வதற்கு, கனடாவின் அகதிகளுக்கான தனியார் அனுசரணை (private refugee sponsorship) முறை, தீர்வாக அமைய முடியுமா?
இக்கேள்விக்கான பதிலை ஆராய்வதே , கனேடிய மத்திய அரசின் அனுசரணையுடன் நடைபெறும் Global Refugee Sponsorship Initiative இன் நோக்கங்களில் ஒன்றாகும். தத்தமது நாடுகளிற்குள் அகதிகளின் வருகையை தனியார் நிதி ஆதரவுடன் எவ்வாறு மேற்கொள்வது எனப் பயிற்சி அளிப்பதே Global Refugee Sponsorship Initiative என்ற நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும்.
கனடாவின் இந்த முறையானது தமது நாடுகளில் எவ்வாறு செயற்படுத்தப்படலாம் என அறிந்து கொள்வதற்காக, ஆர்ஜென்டீனா, ஆஸ்த்ரேலியா, பிரேசில், சிலி, ஜேர்மனி, நியூசிலாந்து, ஐக்கிய இராச்சியம்(UK) மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளின் பிரதிநதிகள், கடந்த வாரம், மூன்று நாள் செயலமர்வொன்றில் கலந்து கொண்டனர்.
“அகதிகளை ஏற்றுக் கொள்ள போதுமான அளவு நாடுகள் இல்ல்லாமை இன்றைய நெருக்கடி நிலையின் ஒரு அங்கமாகும்” என செயலமர்வின் ஆரம்பத்தில் உரையாற்றிய கனேடியக் குடிவரவு அமைச்சர் ஜோன் மக்கலம் தெரிவித்தார். “இச் செயலமர்வின் மூலம் கனடாவின் அகதிகளுக்கான தனியார் அனுசரணை முறையை ஏனைய நாடுகளும் பின்பற்ற முன்வரும் பட்சத்தில், அது அகதி நெருக்கடிக்கான தீர்வாக அமையும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.