GPSஐ மட்டுமே பயன்படுத்தி நீண்டதூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம்: அதிகாரிகள் எச்சரிக்கை
பண்டிகைக் காலத்தில் GPSஐ மட்டுமே பயன்படுத்தி நீண்டதூர பயணங்களில் ஈடுபட வேண்டாம் என கனேடிய மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்மஸ்; மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் பனிப் பொழிவுடன் கூடிய தற்போதைய காலப்பகுதியில் GPS கருவியை மட்டுமே கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்ற அறிவுறுத்தலை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
பொதுமக்கள் தங்கள் பயணங்களை தொடரும் போது, அதற்கான பாதைகளை சுயமாகவும் அறிந்துகொண்டு பயணிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
GPS கருவியை மாத்திரமே நம்பி பயணித்து காட்டுப் பகுதியில் குடும்பம் ஒன்று தனியான நிலையில் அவதிப்பட்ட சம்பவம் ஒன்றை அடுத்தே, அதிகாரிகள் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளனர்.
விடுமுறைக் கால பயணம் ஒன்றினை மேற்கொண்ட பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த குடும்பம் ஒன்றே இவ்வாறு பாதிக்கப்பட்டதாகவும், அந்த குடும்பத்தினர் GPS கருவியை மாத்திரமே நம்பி கல்கரியில் இருந்து சான் பிரான்சிஸ்கோ நோக்கி பயணிக்க முயன்றதாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
ஆனால் நான்கு பேருடன் வாகனம் ஒன்றில் சென்ற அந்த குடும்பத்தினர், நகருக்கு வெளியே சுமார் 45 கிலோமீட்டருக்கு அப்பால் அடர்ந்த காட்டுப்பகுதியில், பனிபடர்ந்த வீதிகளை விட்டு விலகி, தனித்து போயிருந்தனர் என்றும் அவர்கள் விபரித்துள்ளனர்.
சம்பவ இடத்தில் கைத்தொலைபேசி சமிக்கைகள் கிடைக்காமையால் அங்கிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு நடந்து சென்றே, குடும்பத் தலைவரால் தொலைபேசி மூலம் தொடர்பினை ஏற்படுத்தி தமது நிலையினை விபரித்து உதவி கோர முடிந்ததாகவும் அதிகாரிகள் தகவல் வெளியிட்டிருந்தனர்.
தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாகவே சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்களை மீட்டிருந்தனர் என்றும், அதிஸ்டவசமாக இருட்டுவதற்கு முன்னர் சம்பவ இடத்தினை அதிகாரிகள் சென்றடைந்தமையால் அவர்களை கண்டுபிடித்து மீட்க முடிந்தது என்றும் கனேடிய மத்திய காவல்த்துறையினர் விபரித்துள்ளனர்.