சுரங்க லக்மல் மிரட்டல்: முதல் நாள் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை கலங்கடித்த இலங்கை
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று போர்ட் எலிசெபத் மைதானத்தில் தொடங்கியது.
நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டுபிளசி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார்.
இதன்படி தொடக்க வீரர்களாக ஸ்டீபன் குக், டீன் எல்கர் களமிறங்கினார்கள். நிதானமாக ஆடிய ஸ்டீபன் குக் (59) அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார்.
அதேசமயம் டீன் எல்கர் 45 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். அடுத்து வந்த அம்லா (20) நிலைக்கவில்லை.
சிறப்பாக விளையாடி வந்த டுமினி (63) அரைசதம் கடந்த நிலையில், ஹெரத் சுழலில் சிக்கினார். பவுமா (3), அணித்தலைவர் டுபிளசி (37) அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள்.
நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுக்கு 267 ஓட்டங்கள் எடுத்துள்ளது. டி காக் (25), பிளாந்தர் (6) ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இலங்கை அணி சார்பில், வேகத்தில் மிரட்டிய சுரங்க லக்மல் 4 விக்கெட்டுகளையும், ஹெராத் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.