உலக கிண்ணத் தொடருக்கு தலைவராகும் கோஹ்லி? டோனிக்கு நெருங்கி வரும் ஆப்பு
கோஹ்லி தலைமையிலான இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருவதால், அணித்தலைவரான டோனிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக முன்னாள் இந்திய அணியின் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
கோஹ்லி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி, இதுவரை ஐந்து டெஸ்ட் தொடர்களில் விளையாடி உள்ளது.
இதில் 18 டெஸ்ட்களில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து கங்குலி கூறுகையில், கோஹ்லியின் வெற்றிகள் இந்திய அணியின் தேர்வாளர்களுக்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுக்கும்.
மூன்று விதமான போட்டிகளிலும் கோஹ்லி தலைவர் ஆவதற்கு சில காலம் பொறுத்திருக்க வேண்டும்.
ஆனால் அவர் ஒருநாள் போட்டிகளுக்கு விரைவில் தலைவராகிவிடுவார், ஆனால் அது என்று தான் தெரியவில்லை.
வரும் 2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடருக்கு இந்திய அணிக்கு யார் தலைவர் என்பதை அணிக்குழுத்தலைவர்கள் நிச்சயம் முடிவெடுப்பார்கள் என்று கூறியுள்ளார்.
இதனால் வரும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர் டோனிக்கு மிக முக்கியமானது, அவருக்கு அழுத்தம் கொடுக்கும் தொடராக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் இந்திய அணியின் மற்றோரு முன்னாள் வீரரான அசாரூதினும் டோனிக்கு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மிக முக்கியமானது என்றும் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோஹ்லியின் வெற்றிகள் நிச்சயம் அவரை ஒருநாள் அணிக்கான தலைவராக்குவதற்கு வலுவாக்குகிறது எனவும் கூறியுள்ளார்.
இருப்பினும் டோனியின் சாதனைகளையும் தேர்வுக்குழுவினர் கருத்தில் கொள்வார்கள் எனவும் கூறியுள்ளார்.