,
பேட்டிதமன்னா, இந்த வருடம் தர்மதுரை, தோழா, தேவி, கத்தி சண்டை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவற்றில் தோழா படம் தெலுங்கிலும் தேவி படம் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளிவந்தது. இந்த வருட படங்கள் திருப்தி அளித்ததா? அடுத்த வருடத்துக்கு என்ன திட்டம் வைத்து இருக்கிறீர்கள்? என்று தமன்னாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–
‘‘நான் இந்த வருடத்தில் நடித்த படங்கள் அனைத்தும் எனக்கு திருப்தியை தந்தன. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தேன். தர்மதுரையில் எனது நடிப்பு பேசப்பட்டது. தேவி படம் எதிர்பார்த்த வசூல் தரவில்லை என்கின்றனர். அதுபற்றி எனக்கு கவலை இல்லை. அந்த படத்தில் பிரபுதேவா எனது நடிப்பு திறமையை பிரமாதமாக வெளிக்கொண்டு வந்து இருந்தார்.
ரசிகர்கள்நான் வெற்றி தோல்விகளை கவனத்தில் எடுப்பது இல்லை. கதை, கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறதா என்று மட்டுமே பார்க்கிறேன். அப்படிப்பட்ட படங்களில் முழு ஈடுபாட்டுடன் நடிக்கிறேன். படங்கள் ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும் என்பது முக்கியம். ரசிகர்களை கவரும் படங்கள்தான் வெற்றி படங்கள்.
படங்கள் வெற்றி பெறும்போது மகிழ்ச்சி அடைகிறேன். தோல்வி அடையும்போது அது பாடமாக மாறி நிறைய கற்றுக்கொடுக்கிறது. இரண்டு படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினேன். எனக்கு நடனம் ரொம்ப பிடிக்கும். எனக்குள் இருக்கும் நடன திறமையை வெளிப்படுத்துவதற்காகவே ஒரு பாடலுக்கு நடனம் ஆட ஒப்புக்கொண்டேன்.
புத்தாண்டு எதிர்பார்ப்புபுத்தாண்டில் எந்த திட்டமும் இல்லை. சினிமாவில் திட்டம்போட்டு எதையும் செய்ய முடியாது. நாம் ஒன்று நினைத்தால் வேறு ஒன்று நடக்கும். பாகுபலி இரண்டாம் பாகம் படத்தை மட்டும் புத்தாண்டில் ஆர்வமாக எதிர்பார்க்கிறேன். இந்த படம் அதில் பணியாற்றிய நடிகர்–நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்குமே முக்கிய படம். அது எல்லோருக்கும் பெயர் வாங்கி கொடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்தியில் நல்ல கதை வந்தால் மீண்டும் நடிப்பேன்.’’
இவ்வாறு தமன்னா கூறினார்.