கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அராஜகம் – நாட்டை குழப்பும் முயற்சி! அழித்து காத்தவர் மஹிந்தவே
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் பாதாள உலகக்குழுவினரின் செயற்பாடுகள் இருக்கவில்லை எனவும், தற்போதைய அரசாங்கத்தில் இது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதை கூறியுள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
மஹிந்த ஆட்சிக்காலத்தில் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்ற பாதாள உலகக்குழுவினர் அனைவரும், நல்லாட்சியில் மீண்டும் நாட்டிற்கு படையெடுக்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னைய ஆட்சிக்காலத்தில் இவை அனைத்தையும் அழித்து நாட்டையும் நாட்டு மக்களையும் காத்தவர் மஹிந்தவே. ஆனால் தற்போது தலைதூக்கியுள்ள பாதாள உலகக்குழுவினருக்குப் பின்னால் இந்த அரசாங்கமே இருப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், அடக்குமுறைகளை கையாள்வதற்கு இராணுவத்தினரையும், பாதாள உலகக்குழுவினரையும் தற்போதைய அரசாங்கம் பயன்படுத்தி வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த அரசாங்கமே இந்த பாதாள உலகக்குழுவினரை உருவாக்கி அரசியல் தேவைகளை நடாத்தி வந்ததாக ஆளும் கட்சியிலிருக்கும் உறுப்பினர்கள் கூறிவருகின்றனர்.
ஆனால் இவற்றை மறுத்து, நல்லாட்சியே இந்த பாதாள உலகக்குழுக்களை உருவாக்கி நாட்டை குழப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனைவரும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லாட்சியில் இருப்பவர்களும், கூட்டு எதிர்க்கட்சியில் இருப்பவர்களும் இவ்வாறு ஒருவருக்கு ஒருவர் பலியை சுமத்திக்கொண்டு இருக்கின்றரே தவிர இந்த பாதாள உலகக்குழுக்களை அடக்கும் முயற்சியை முன்னெடுத்திருப்பதாக தெரியவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.