வீட்டில் மறைத்துவைக்கப்பட்ட துப்பாக்கிகளை, கைப்பற்றியது கனேடிய பொலிஸ்
லோங்குவில் நகரைச் சேர்ந்த பொலிஸார் அதிகளவான ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.
குஹோ பேனாட் என்ற 43 வயதானவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சுமார் 50இற்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் உட்பட ஏனைய ஆயுதங்கள் அவருடைய வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, இத்தனை துப்பாக்கிகளை ஒருவரால் எவ்வாறு சேர்க்க முடிந்தது என்பதையிட்டு ஆச்சர்யம் வெளியிட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள் அது குறித்து விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்டவற்றில் 31 கைத் துப்பாக்கிகள், 14 நீளத் துப்பாக்கிகள், 11 தடை விதிக்கப்பட்ட ஆயுதங்கள், 3 ஏ-15 ரக துப்பாக்கிகள் போன்றன காணப்படுகின்றன.
அண்மைய கால கனேடிய பொலிஸ் பதிவுகளின் பிரகாரம், பாரிய தொகை ஆயுதப் பறிமுதலாக இது பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஆயுதங்கள் அனைத்தையும் பொலிஸார் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதுடன், கைதானவரும் விரைவில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.