கொளுத்தி போடும் சசிகலாவின் கணவர்: உதயமாகிறதா? அம்மா திராவிட முன்னேற்ற கழகம்
பல்வேறு மாவட்டங்களில் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சி உருவாகி வருகிறது என அதிமுகவைச் சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 5 ஆம் திகதி தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.
இதையடுத்து, அவரது உடல் மெரினா கடற்கரையில் முன்பு எம்.ஜி.ஆர் நினைவிடம் என்ற பெயரில் இருந்த இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுக கட்சியில் அவர் வகித்து வந்த பொதுச் செயளாலர் பதவி காலியாக உள்ளதால், அவரது தோழி சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு அதிமுகவைச் சேர்ந்த சில எம்.எல்.ஏக்களும், அமைச்சர்களும் போயஸ்கார்டன் சென்று அவரை வற்புறுத்தி வருவதாக தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
மேலும், அம்மாவை அடுத்து அவரை தான் சின்னம்மா என்று அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில், பல்வேறு நில அபகரிப்பு வழக்குகள் ஜெயலலிதாவால் போடப்பட்டு, அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட சசிகலாவின் கணவர் நடராஜன் தற்போது ஜெயலலிதா மறைந்த பின் தான் வெளியில் வந்துள்ளார்.
இதை தொடர்ந்து, இவர் தான் சசிகலாவை பதவி ஏற்க சொல்லி வரும் செய்திகள் அனைத்தையும் திட்டமிட்டு பரப்பி வருகிறார் என்று கூறப்பட்டு வருகிறது.
மேலும், மேல்மட்ட நபர்கள் தங்கள் பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமே என நினைத்துக் கொண்டு சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து அவரிடம் சரணடைந்து விடுகின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், தொண்டர்கள் சசிகலாவை விரும்பவில்லை என்பதால் பல மாவட்டங்களில் அம்மா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சி ஒன்று உருவாகி வருவதாகவும், இப்புதிய கட்சியின் தலைவர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்றும் அதிமுக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.