முரளி விஜய், கோஹ்லி அபார சதம்: இங்கிலாந்தை திணறடித்த இந்தியா
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது.
இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 400 ஓட்டங்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
இந்தியா அணி தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்டும், ஜடேஜா 4 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இதன் பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் (24) ஏமாற்றினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த முரளி விஜய்- புஜாரா இருவரும் சிறப்பாக விளையாடி ஓட்டங்கள் சேர்த்தனர்.
நேற்றைய 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்கள் எடுத்தது. முரளி விஜய் (70), புஜாரா (47) களத்தில் இருந்தனர்.
இன்று 3வது நாள் ஆட்டம் நடந்தது. இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே புஜாரா 47 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
அடுத்து முரளி விஜய்யுடன் அணித்தலைவர் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் இந்தியாவின் ஓட்டங்கள் மளமளவென உயர்ந்தது.
முரளி விஜய் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். 46வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 8வது சதமாகும்.
தொடர்ந்து நிதானமாக ஆடிய முரளி விஜய் 136 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கருண் நாயர் (13) நிலைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து வந்த பார்த்தீவ் (15), அஸ்வின் (0), ஜடேஜா (25) வரிசையாக ஆட்டமிழந்தனர்.
இருப்பினும் மறுமுனையில் சிறப்பாக ஆடி வந்த அணித்தலைவர் கோஹ்லி சதம் அடித்தார். இது அவருக்கு 15வது சதமாகும்.
இன்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 451 ஓட்டங்கள் எடுத்து 51 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது.
அணித்தலைவர் கோஹ்லி 147 ஓட்டங்களுடனும், ஜெயந்த் யாதவ் 30 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.