ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு! பரபரப்பாகும் அப்போலோ வளாகம்!
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, இன்று மாலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் இருதயவியல் நிபுணர்கள், நுரையீரல் நிபுணர்கள், தீவிர சிகிச்சை நிபுணர்கள் அவரது உடல் நிலையைக் கண்காணித்து வருவதாகவும் அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ம் தேதியன்று உடல் நலக் குறைவின் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரது உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்தப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் , அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது. அவரது உடல்நிலையை இதயவியல், நுரையீரல் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்து, சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் இன்று மாலை முதல் அப்போலோ வளாகம் திடீர் பரபரப்படைந்துள்ளது.குறிப்பாக அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் அனைத்து உயர் போலீஸார்களும் அப்போலோ விரைந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
நீண்ட நாட்களுக்கு பின்னர், அரசுத்துறை உயர் அதிகாரிகள் அப்போலோ விரைந்துள்ளதால், மருத்துவமனை வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.
சென்னையில் இருக்கும் காவல் நிலையங்களுக்கு சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறதாம்.
மருத்துவர்கள், ஜெயலலிதாவின் இதய செயல்பாடுகளை உற்று நோக்கி வருகிறார்களாம்.
இந்நிலையில் அதிமுகவின் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும், இன்று மாலை 6 மணிக்கு ஈஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜை செய்ய, தலைமையிடம் இருந்து உத்தரவு வந்துள்ளதாம்.
இதனால் கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்போலோவில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது
– Vikatan