164 ஓட்டங்கள் குவித்த ஸ்மித்: சொந்த மண்ணில் நியூசிலாந்தை பந்தாடிய அவுஸ்திரேலியா
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஸ்மித் சதத்தால் அவுஸ்திரேலியா 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியாவில் இன்று தொடங்கியது. இவ்விரு அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடியது. தொடக்க வீரர்களாக வார்னர், பிஞ்ச் களமிறங்கினார்கள்.
பிஞ்ச் முதல் பந்திலேயே ஸ்டெம்பை பறிகொடுத்தார். வார்னரும் (24) நிலைக்கவில்லை.
நெருக்கடியான நிலையில் களமிறங்கிய அணித்தலைவர் ஸ்மித் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார். அவர் 157 பந்தில் 14 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 164 ஓட்டங்கள் குவித்தார்.
அதே போல் ட்ராவிஸ் ஹெட் (52) அரைசதமும், விக்கெட் கீப்பர் வடே 38 ஓட்டங்களும் குவித்தனர். இதனால் அவுஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 324 ஓட்டங்கள் குவித்தது.
இதன்பின்னர் 325 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.
தொடக்க வீரராக மார்ட்டின் குப்தில், லாதம் ஆகியோர் களமிறங்கினார்கள். லாதம் (2), அடுத்து வந்த அணித்தலைவர் வில்லியம்சன் (9) நிலைக்கவில்லை.
ஆனால் சிறப்பாக ஆடிய குப்தில் 102 பந்தில் 10 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 114 ஓட்டங்கள் எடுத்தார். இதன் பின்னர் முன்றோ (49), நீசம் (34) மட்டுமே ஓரளவு ஓட்டங்கள் எடுத்தனர்.
மற்றவர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி 44.2 ஓவர்களில் 256 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் அவுஸ்திரேலியா 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
The Bailey Shuffle #AUSvNZ