‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் குணச்சித்திர நடிகராக பிரபலமான நடிகர் ஹரி கிருஷ்ணன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘வேம்பு ‘எனும் திரைப்படத்தின் முதல் தோற்ற பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை தேசிய விருது பெற்ற படைப்பாளியான இயக்குநர் சீனு ராமசாமி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் வி. ஜஸ்டின் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேம்பு ‘ எனும் திரைப்படத்தில் நடிகர் ஹரிகிருஷ்ணன், நடிகை ஷீலா முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஏ. குமரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மணிகண்டன் முரளி இசையமைத்திருக்கிறார். எளிய மனிதர்களின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மஞ்சள் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கோல்டன் சுரேஷ் மற்றும் எஸ். விஜயலட்சுமி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
அகமதாபாத் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தெரிவு செய்யப்பட்டிருக்கும் ‘வேம்பு ‘ திரைப்படத்தின் முதல் தோற்றப் பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் கதையின் நாயகனும், நாயகியும் இயற்கையை பாதுகாக்க போராடும் எளிய மனிதர்களாக தோன்றுவதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.