வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நீதி கோரி கிளிநொச்சியில் இன்று (4) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சிச்சி பழைய கச்சேரி வரை முன்னெடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, இந்த போராட்டத்தில் சுதந்திர தின அறிக்கை வாசிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது:
இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதி தமிழ் தேசத்தின் கரி நாள் என நாம் பிரகடனப்படுத்தியுள்ளோம். இத்தீவின் வடக்கு கிழக்கை தாயகமாகக் கொண்ட தமிழ் தேசத்தை ஆக்கிரமித்திருந்த ஆங்கிலேயர் தாம் கொண்டிருந்த ஆக்கிரமிப்பு மேலாதிக்கத்தை இத்தீவின் பெளத்த சிங்கள தேசத்திடம் தாரைவார்த்த நாளே கரி நாளாகும்.
1948ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட நாளிலிருந்து தமிழர்கள் தமது வாழ்வாதாரங்களை ஒவ்வொரு துறையிலும் இழக்கத் தொடங்கினர்.
1956இல் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டமூலம் நமது மொழி, பண்பாட்டுப் படுகொலையின் தொடக்கமாகும்.
1958ஆம் ஆண்டும் அதன் பின்னரும் நடைபெற்ற திட்டமிடப்பட்ட இனக் கலவரமும் இனப்படுகொலையும் 1970இலும் அதன் பின்பும் தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழக தரப்படுத்தலின் ஊடாக தமிழர்கள் பல்கலைக்கழக கல்வி பெறுவது தடுக்கப்பட்டது.
1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியரசு யாப்பின் மூலம் இலங்கை ஒரு பௌத்த சிங்கள நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது.
1981ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான சிங்கள அரசின் அமைச்சர்களான காமினி திசாநாயக்க ஸ்ரீல் மத்தியூ முதலியோர் தலைமையிலான குழுவினரும் அவர்களுடன் இராணுவமும் பொலிஸும் முன்னின்று யாழ்ப்பாண பொது நூலகத்தை எரித்தமை இன்னொரு இன அழிப்பின் உச்சத்தை காட்டியது.
இலங்கையை ஆண்டு வந்த பல்வேறு சிங்கள அதிபர்களால் தொடர்ந்து பல்வேறுபட்ட வழிகளில் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற இனப்படுகொலைகளில் நாகர்கோவில் விமான குண்டு தாக்குதல், நவாலி சென் பீட்டர் தேவாலய தாக்குதல், நூற்றுக்கணக்கான செம்மணி புதைகுழிகள் போன்ற இனப்படுகொலைகள், இனப்படுகொலைகளின் சாட்சி பகிரும். தொடர்ச்சியாக அதேபோல் கடந்த சில தசாப்தங்களாக சிங்கள இராணுவத்தால் தொடர்ந்து நடாத்தப்பட்ட கொலை, கற்பழிப்பு, சித்திரவதை, வலிந்து காணாமல் ஆக்கப்படுத்தல் ஆகியவும் ஒரு சாதாரண நாளாந்த நிகழ்வுகளாயின.
இப்படியே இன்னும் பட்டியல் நீண்டு சென்று 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பேரவலம் வரை நிகழ்ந்தது. இன்று வரை எந்த நீதியும் இன்றி உள்நாட்டுப் பொறிமுறையால் திட்டமிடப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி கிடைக்காமல் நாம் சர்வதேச நீதி பொறிமுறையை வேண்டி போராடிக் கொண்டிருக்கிறோம்.
இக்கரி நாளில் பின்வரும் விடயங்களை நாம் வலியுறுத்துகிறோம்.
1. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதி வேண்டும்.
2. தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
3. பௌத்தமயமாக்கல் உடனே நிறுத்தப்பட வேண்டும்.
4. தமிழர் தாயக பிரதேசத்தில் தொடர்ச்சியாக நடந்துவரும் நில அபகரிப்பு உடனே நிறுத்தப்பட வேண்டும்.
5. தாயக வளத்தை அபகரிப்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
6. தமிழர் தாயக பிரதேசத்தில் இருந்து இராணுவம் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்.
7. தமிழின படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும்.
8. சிவில் செயற்பாட்டாளர்கள் மீதான அச்சுறுத்துதல்கள் நிறுத்தப்பட வேண்டும்.
9. ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவது நிறுத்தப்பட வேண்டும்.
10 எமது நிலம் எமக்கு வேண்டும்.
11. தாயகம், தேசியம், அரசியல் சுயநிர்ணயம் என்பன எமது உரிமைகள். அவற்றை உடனே அங்கீகரிக்க வேண்டும்.
12. வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும்.
13 சர்வதேசம் வட்டுக்கோட்டை தீர்மானத்தை அங்கீகரிக்க வேண்டும்.
14 எமது தலைவிதியை நாமே தீர்மானிக்க சர்வதேச நியமங்களுக்கு அமைய எமது தாயக பிரதேசத்தில் பொது வாக்கெடுப்பு நடத்துமாறு சர்வதேசத்தை கோருகிறோம்.
இப்போது பொறுப்பேற்று இருக்கின்ற அரசு கிளீன் ஸ்ரீலங்கா என கூறிக்கொண்டு எமது நிரந்தர அரசியல் தீர்வினை தருவதில் எந்த அக்கறையும் காட்டாமல் இருந்துகொண்டு அடுத்தடுத்து வருகின்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அரசை மேலும் மேலும் பலப்படுத்துவதில் இலக்காக இருப்பதுடன் எமது நிரந்தர அரசியல் தீர்வினை தராமல் இருந்துகொண்டு ஒற்றை ஆட்சியை பலப்படுத்துவதிலேயே க்ளீனாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே இவர்களிடம் இருந்து எந்த நீதியும் நிரந்தர அரசியல் தீர்வும் கிடைக்காது. சர்வதேசமே தலையிட்டு மேற்குறிப்பிட்ட 14 விடயங்களையும் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என இக்கரி நாளில் பிரகடனப்படுத்துகிறோம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
இப்போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், சிவாஜிலிங்கம் முதலான அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
மேலும், போராட்டத்தில் கலந்துகொண்ட சிவஞானம் ஸ்ரீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவாஜிலிங்கம் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.