இலங்கையை தாக்கவுள்ள சூறாவளி..! விழிப்போடு இருக்குமாறு கோரிக்கை
நாட்டில் சீரற்ற காலநிலை ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வளிமண்டல திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
திருகோணமலையிலிருந்து 480 கிலோமீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவின் தென்மேற்கு பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் சூறாவளியாக வலுவடைந்து வருகிறது.
இந்நிலையில், அடுத்த 12 மணித்தியாலங்களில் தாழமுக்கம் சூறாவளியாக வலுபெற்று வடமேல் திசையில் யாழ். குடாநாட்டை அண்மித்து நகர்வதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம் உள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இந்த சீரற்ற காலநிலை நாளை நள்ளிரவு அளவில் சூறாவளி தமிழகத்தை நோக்கி நகரும்.
குறித்த தாழமுக்கத்தின் விளைவாக டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை வடக்கு கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் கடும் மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் ஏற்பட்டுள்ளன.
மன்னாரில் இருந்து காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புக்களில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
இதேவேளை கடற்பரப்பிலும் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் மக்களை விழிப்பாக இருக்குமாறும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.