ஜனாதிபதியோ பிரதமரோ இராணுவத்தினை காட்டிக்கொடுக்க மாட்டார்கள் – பௌத்தத்திற்கே முதன்மை
உயிர் தியாகம் செய்து வெற்றியைத் தேடித்தந்த இராணுவத்தை ஒருபோதும் ஜனாதிபதியோ, பிரதமரோ காட்டிக் கொடுக்க மாட்டார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் அமுணுகம தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார்.
அவர் தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
மஹிந்த கடந்த காலத்தில் தேர்தலை நடத்தியது இலங்கையில் உள்ள ஜோதிடர்கள் கூறிய அறிவுரையின் அடிப்படையில் இல்லை.
ஜெனிவாவை கருத்திற் கொண்டே அவர் தேர்தலை நடத்தினார். ஆனாலும் அவர் எதிர்பார்க்காத வகையில் தோல்வியடைந்தார்.
மேலும், எமது நாட்டில் இடம்பெற்ற போரினை வெற்றி கொள்ள இராணுவத்தினர் உயிர்தியாகங்களைச் செய்தனர். அவர்களுடைய சேவை என்பது அளப்பரியது.
அதனை ஒருபோதும் நாம் மறக்கமாட்டோம். அதேபோன்று எந்த நிலையிலும் இராணுவத்தினரை காட்டிக் கொடுக்க மாட்டோம் அதே நிலைப்பாட்டில் தான் ஜனாதிபதியும் பிரதமரும் இருக்கின்றார்கள்.
இலங்கை அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி சர்வதேச ரீதியில் செயற்படுத்தி வரும் செயற்பாடுகள் காரணமாகவே சர்வதேச ரீதியில் அவர் நற்பெயர் பெற்றுள்ளார்.
இதேவேளை தற்போது புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பல்வேரு வகையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு கொண்டு வருகின்றது.
உண்மையில் வடக்கிற்கு மட்டும் சாதகமான வகையில் புதிய அரசியல் அமைப்பு ஒரு போதும் அமைக்கப்படாது. முழு நாட்டு மக்களும் ஒத்துழைத்தால் மட்டுமே இது நிறைவேற்றப்படும்.
அதேபோன்று இலங்கையில் பௌத்தத்தை ஒரு போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம். அதன் முக்கியத்துவம் பற்றி தெரியும்.
பௌத்த சாசனத்திற்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே புதிய அரசியல் யாப்பு அமைக்கப்படும் எனவும் சரத் அமுணுகம தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.