இலங்கை அணியினருக்கு எச்சரிக்கை விடுத்த பயிற்சியாளர்
தென் ஆப்பிரிக்கா செல்லும் இலங்கை அணிக்கு மிகப் பெரிய சவால் காத்திருப்பதாக இலங்கை அணியின் பயிற்சியாளர் கிரகாம் போர்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை அணி சமீபத்தில் ஜிம்பாப்வேயில் நடந்த முத்தரப்பு தொடரை வெற்றிகரமாக கைப்பற்றியது.
தாயகம் திரும்பிய இவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் இலங்கை அணியின் பயிற்சியாளர் கிரகாம் போர்டு கூறுகையில், இலங்கை அணியின் வெற்றி சிறப்பானது என்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் மேத்யூஸ், சந்திமால் இல்லாமல் இலங்கை அணி வீரர்கள் தங்கள் ஆட்டத்தை திறம்பட வெளிப்படுத்தினர் எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போது வெற்றிக்களிப்பில் இருக்கும் இலங்கை அணிக்கு வரும் டிசம்பர் மாதம் மிகப்பெரிய சவால் காத்திருப்பதாக கூறியுள்ளார்.
இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டிகள், 3 டெஸ்ட் போட்டிகள், 3 டி20 போட்டிகள் விளையாட உள்ளது.
அவுஸ்திரேலியா அணியுடன் வெற்றி பெற்றது சொந்த மண்ணில் என்றும் தென் ஆப்பிரிக்கா தொடர் முற்றிலும் வேறுபட்டது என்றும் அதற்கு ஆயத்தமாக இலங்கை வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இருப்பினும் அவுஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளதால், அது அவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை அளிக்கும் எனவும் கூறியுள்ளார்.
மேலும் தென் ஆப்பிரிக்கா தொடருக்கு மேத்யூஸ், சந்திமால் உடல் தகுதி பெற்றுவிட்டதாகவும் விரைவில் அணியுடன் இணைவார்கள் எனவும் கூறியுள்ளார்.