ரூ.355 கோடி அல்ல லட்சத்திற்காக போராடிய வாலிபர் உயிரிழந்துள்ள சம்பவம்
அமெரிக்காவில் 7 வயதில் துப்பாக்கி குண்டு தாக்கப்பட்டு உடல் செயலிழந்த வாலிபர் ஒருவர் தற்போது 29 வயதில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியா நகரை சேர்ந்த Brandon Maxfield(தற்போதைய வயது 29) என்பவர் 7 வயது சிறுவனாக இருந்தபோது அவரை ஒரு பணிப்பெண் பராமரித்து வந்துள்ளார்.
அப்போது சிறுவனது வீட்டில் கை துப்பாக்கி ஒன்று இருந்துள்ளது. பணிக்கு வந்த பெண் துப்பாக்கியை எடுத்து அதில் இருந்த குண்டுகளை வெளியே எடுக்க முயன்றுள்ளார்.
ஆனால், எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த விபத்தில் சிறுவனின் முதுகிலும் கழுத்து பகுதியிலும் சுட்டுள்ளார்.
இரண்டு இடங்களில் குண்டு பாய்ந்ததால் சிறுவனின் உடல் கழுத்துக்கு கீழ் செயலிழந்து போனது.
இந்நிலையில், கடந்த 2003-ம் ஆண்டு துப்பாக்கியை தயாரித்த நிறுவனம் மீது சிறுவன் வழக்கு பதிவு செய்துள்ளார்.
துப்பாக்கியில் உள்ள கோளாறுகளை சரி செய்யாததன் காரணமாக தான் துப்பாக்கி எதிர்பாராமல் வெடித்தது என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சிறுவனுக்கு 24 மில்லியன் டொலர்(355,69,20,000 இலங்கை ரூபாய்) இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இழப்பீடு வழங்க நிறுவனம் ஒப்புக்கொண்ட போதிலும், அதன் வங்கியில் போதுமான பணம் இல்லாததால் தங்களிடம் உள்ள துப்பாக்கிகளை முழுவதுமாக விற்பனை செய்த பிறகு இழப்பீட்டை வழங்குகிறோம் என நிறுவனம் உறுதியளித்தது.
ஆனால், இவ்விவகாரத்தை அறிந்த சிறுவன் ஒரு அதிரடி முடிவினை எடுத்துள்ளார்.
‘எனக்கு நேர்ந்த விபத்து போல் வேறு யாருக்கும் நிகழக்கூடாது’ என முடிவெடுத்த சிறுவன் நிறுவனத்திற்கு தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், ‘உங்களிடம் உள்ள அனைத்து துப்பாக்கிகளையும் அழித்து விடுங்கள். எனக்கு நீங்கள் இழப்பீடு தர வேண்டாம்’ என கோரியுள்ளார்.
சிறுவனின் இந்த கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
ஆனால், இதுதொடர்பான முடிவுகள் எடுப்பதற்குள் கடந்த சனிக்கிழமை அன்று தற்போது 29 வயதான அந்த வாலிபர் கலிபோர்னியா நகரில் உள்ள அவரது வீட்டிலேயே உயிரிழந்து விட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இழப்பீட்டு தொகையை வாங்காமல் லட்சத்திற்காக போராடிய வாலிபர் உயிரிழந்துள்ள சம்பவம் அந்நகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.