ஐரோப்பாவாக மாறுமா இலங்கை?! ஐ.எஸ் பயங்கரவாதிகளை காட்டிக்கொடுத்த கோத்தபாய!!
இலங்கையை சேர்ந்த 32 பேர் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்து கொள்வதற்காக சிரியா சென்றுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்திருந்தார்.
அமைச்சரின் கருத்து பல்வேறு மட்டத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஐ.எஸ் அமைப்புடன் இலங்கையர்கள் கொண்டுள்ள தொடர்பு நீதியமைச்சருக்கு எவ்வாறு தெரிந்தது என்பது தொடர்பில் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்த தகவல்களை விஜயதாஸவுக்கு வழங்கியது யார் என அரசாங்க புலனாய்வு பிரிவிடம், ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
எனினும் அவ்வாறான தகவல்களை அமைச்சருக்கு தாங்கள் வழங்கவில்லை எனவும், இந்த தகவல்கள் கடந்த 3 வருடத்திற்கு முன்னர் அப்போதைய அரசாங்கத்தின் ஊடாக அறிந்துக் கொண்டிருந்த தகவல் எனவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் கிடைத்த தகவல்களை இன்று கிடைத்த தகவல் போன்று குறிப்பிட்ட அமைச்சர் நாடாளுமன்றில் வெளியிட்டுள்ளார். இந்த தகவல்களை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க புலனாய்வு பிரிவு, ஜனாதிபதியிடம் அறிவித்துள்ளது.
இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர் ஐ.எஸ் அமைப்பில் இணைந்து அங்கு உயிரிழந்ததாக கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன. அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய ஆப்கானிஸ்தானில் அரச சார்பற்ற அமைப்பில் சேவை செய்த இலங்கையை சேர்ந்த ஒருவர் அங்கிருந்து ஐ.எஸ் அமைப்பின் மீது ஈர்ப்புக் கொண்டு தனது உறவினர்களுடன் சிரியாவுக்கு சென்றுள்ளார். அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவர் அமெரிக்காவின் விமான தாக்குதலில் உயிரிழந்திருந்தார்.
எனினும் ஐ.எஸ் அமைப்பினர் இலங்கைக்கு வந்து இங்குள்ளவர்களுக்கு பயிற்சி வழங்குவதாக ஒரு போதும் செய்தி வெளியாகவில்லை.
இவ்வாறான சம்பவம் பிரித்தானியா, ஐரோப்பா நாடுகளில் பதிவாகியுள்ள போதிலும், அந்த நாடுகளின் நீதியமைச்சர்கள் அதனை பிரதான சம்பவமாக உரையாற்றி இனங்களுக்கிடையில் சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை.
எனினும் பழைய சம்பவத்தை புதியதாக நீதியமைச்சர் நாடாளுமன்றில் தெரிவித்தமையானது, இலங்கை சுற்றுலாத்துறையை பெரிதும் பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சர்வதேசம் என்ன கூறினாலும், பயங்கரவாத தடை சட்டத்தை மீண்டும் வலிமைப்படுத்தும் வகையிலான கருத்தொன்றை நீதியமைச்சர் வெளியிட்டிருந்தார். இந்த கருத்துக்களை சபாநாயகர் கடுமையாக நிராகரித்துள்ளார்.